Monday, June 29, 2009

போதலின் தனிமை


எல்லைகளைக் கடக்கின்ற பாதங்களில்
குவிந்திருக்கின்றது வழி

தன்னை மீட்க கடந்த தொலைவின்
நிழல் கசிந்த ஒரு நொடியில் ஆனது அனைத்தும்

வரவின் கூடலில் வந்தமரும் குருவிகளிடம்
இருப்பிடம் கேட்க
இறக்கையினை அடிக்கின்றன அவை

பேச்சரவம் அரவத்தினைப் போல
சுருண்டுக் கிடக்க
வார்த்தைகள் வாலாட்ட முனையாமல்
பம்முகின்றன
போகவேண்டிய இடம் குறித்த பிரக்ஞையில்

Friday, June 26, 2009

இன்னும் முடியாத உங்களின் விவாதங்களை
என்ன செய்யமுடியும் உங்களால்
செவிகள் மறுத்த சொற்கள் மீள்கின்றன
மீண்டும் எங்களிடம்
சொற்களை அனுப்புவதற்குப் பதில்
கணைகளை வீசுகின்றீர்
கணைகள் நேரிடையானவை ஒரு சாதிவெறியனைப் போலெனின்
எங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவோம்
நட்பை கணைகளாக்கும் உங்கள்
தத்துவம் புரியாமல்
நிற்கிறோம்
எனினும் போர்க்காலம் என்பதை
மேகங்கள் தீர்மானிப்பதில்லை

Monday, May 4, 2009

தமிழர்களின் தேர்தல்

http://தம்ழர்களின் தேர்தல்
தமிழீழப் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு அது அறுவடை செய்வதற்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தேர்தல் வரப்போகிறது, இறுதியும் மூன்றாவது கட்ட தேர்தலில் தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி நடக்கிறது. மொத்தம் 107 மக்களவை தொகுதிகளில் மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கிறது. அதில் 40 தொகுதிகள் தமிழ் பேசக்கூடிய அல்லது தமிழர்களின் ஒட்டு மொத்த ஓட்டுகள் பதிவாகக் கூடிய இடங்கள்.
இந்த தேர்தல் மற்ற தேர்தல்களைவிட முக்கியமான ஒன்று. ஏனென்றால் ராஜிவ் படுகொலையை காரணமாக வைத்து யாரும் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பேசுவதில்லை. அப்படி பேசுபவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக பார்க்கப்படுவதும் தடா பொடா போன்ற கொடும் சட்டங்களில் மாட்டி வைக்கப்படுவதும் நடந்துக்கொண்டிருந்தது. மதுரை திருமங்கலம் பொதுக்கூட்ட்த்தில் பேசியதற்காக வைகோ உட்பட பத்து பேர் பொடா சட்ட்த்தில் சிறையில் அடைக்கப்பட்டு பத்தொன்பது மாதம் சிறையில் அடைக்கப் பட்டார்கள் அதுவும் தற்போது அவர் மிக பிரமாண்டமாய் நம்பியிருக்கும் அவரின் தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது. தற்போது முதல்வராக இருப்பவர் அதை எதிர்த்து போராடினார்.வைகோவை விடுதலைச் செய்ய முதல் கையெழுத்தைப் போட்டார். அவர் இப்போது முதல்வராக இருக்கும்போது ஈழத்தமிழருக்காக யாராவது பேசினால் தேசியப்பாதுகாப்பு சட்ட்த்தில் போடுகிறார். சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.
தற்போதைய தேர்தல் தமிழ்நாட்டு தமிழர்களை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தேர்தலின் முக்கிய பிரச்சனையாக வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈழத்திற்கு ஆதரவாக யார் இருந்தார்கள் தற்போது யார் இருக்கிறார்கள் என்பதுதான். காலங்காலமாய் ஈழத்தமிழர் பிரச்சனையில் கவனம் செலுத்தி அதில் தன் பங்களிப்பை தந்து கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி. அதற்காக அவர் செய்தவற்றை எல்லாம் அவரே பட்டியல் போட்டு காண்பித்திருக்கிறார். அண்மையில் விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அதற்காக தான் ஒரு மாநில முதல்வர் என்னும் நிலை கடந்து இரங்கல் பா எழுதினார். அது மிகப்பெரிய தேசத்துரோகமாக செல்வி.ஜெயலலிதா அவர்களால் பேசப்பட்டது.ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்னும் கோரிக்கையும் ஜெயலலிதா அவர்களால் வைக்கப்பட்டது.
ஈழத்தில் மகிந்த ராசபக்சேவும் கோத்தபய ராசபக்சேவும் சேர்ந்து மாபெரும் இன அழிப்புப் போரை தொடர்ந்த போது தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. முத்துக்குமாரின் மரணமும் அவரின் கடிதமும் மாணவர்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் இப்பிரச்சனைக்குறித்த வீரியத்தை கூட்டின. தமிழ் திரைக்கலைஞர்கள் நட்த்திய ராமேசுவரம் பேரணியும் அதில் சீமான் ஆற்றிய உரையும் ஈழத்தமிழருக்கான ஆதரவினை தமிழர்கள் மத்தியில் வேகமாக்கின. வழக்கறிஞர்களின் போராட்டங்கள், மாணவர்களின் போராட்டங்கள் வேகமாயின.
தேர்தல் களமும் கொஞ்சம் கொஞ்சமாய் அமைந்தது.வழக்கமான அணி மாறலுக்கு தயாரானார் ராமதாசு. அதற்காக போர்நிறுத்தம் பற்றி பேசினார். போர்நிறுத்தம் செய்ய என்னவெல்லாம் திமுக செய்யவேண்டும் என்று கருதினாரோ அதையெல்லாம் பாமக வும் செய்ய வேண்டும் என்பதை லாவகமாக மறந்து கருணாநிதியை தாக்க ஆரம்பித்தார். விடுதலைச் சிறுத்தைகள் ராம தாசை மனப்பூர்வமாக நம்பியது. அவர் பேச்சைக்கேட்டு உண்ணாவிரதத்தைக் கூட முடித்துக்கொண்டார் திருமாவளவன். தா. பாண்டியன் போன்றவர்கள் அதிமுக கூட்டணிக்கு தாவ தயாராய் இருந்தனர். ராமதாசும் தயாராகிவிட்டார் என்று அவரின் நடவடிக்கைகள் காட்டின.
இந்த நேரத்தில் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர் குறித்து உதிர்த்தவை முக்கியமானவை. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனரே என்றால் போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுதான் ஆவார்கள் என்றார். ஈழம் என்னும் ஒரு வார்த்தையே இல்லை என்றும் அவர்கள் ஈழத்தமிழர்கள் அல்ல இலங்கைத்தமிழர்கள் என்றும் முழக்கினார்.
ஈழ ஆதரவு தலைவர்கள் இரண்டு அணிகளாய் பிரிந்தனர். ஒரு அணி அதிமுகவுடன் மற்றொன்று திமுகவுடன். தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனைய முக்கியமாக தமிழர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்று ஜெயலலிதாவுக்குச் சொல்லப்பட்டு தன் நிலைப்பாட்டிலிருந்து மாறுகிறார் ஜெயலலிதா. காங்கிரசுக்கூட்டணிக்காக அவர் காத்திருந்த போது ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசினார். ராசபக்சேவின் தங்கையாகவே இருந்தார்.அதனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருக்கிறார் கருணாநிதி என்று சோனியாவுக்கு ஞாபகப்படுத்தி ஆட்சியைக் கலைக்க கூட கோரினார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது கருணாநிதியின் உள்ளம்தான். தன்னுடைய ஆட்சியைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் நினைத்தார். அதனால் தன்னுடைய நிலையிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். ஜெயலலிதா மிகவும் சரியாக இருப்பதாக காங்கிரசு தலைவர்களில் சிலபேர் பேசகூட ஆரம்பித்தனர். திருமாவளவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டார். அவர் கைது செய்ய சொன்ன சீமானை அப்போது கைது செய்திருந்த்து தமிழக அரசு. சட்டம் தன் கடமையினைச் செய்ய சொன்னார் தன்னுடைய கூட்டாளி வைகோவை கைது செய்தபோது. திருமாவளவன் கைது செய்யப்படாத்தற்கு என்ன காரணம் என்றார்.
ஆனால் தேர்தல் நெருங்கநெருங்க ஜெயலலிதா ஈழ எதிர்ப்பு என்னும் நிலையிலிருந்து மெல்ல மெல்ல தன் சாயத்தை மாற்ற ஆரம்பித்தார். தமிழகத்தின் தமிழர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக போராடுகிறார்கள் என்பதும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அதற்காக அவர்கள் ஆயுதமாக மாற்றப் போகிறார்கள் என்பதை அறிந்து மாறுகிறார். காங்கிரஸ் கூட்டணி வேறு இல்லை என்றாகிவிட்ட நிலையில் அமைந்திருக்கும் கூட்டணியில் உள்ள தா.பாண்டியன் போன்றவர்கள் நிலைமையை எடுத்துச் சொல்ல ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த்தை நாடகம் என்று வர்ணித்த அவர் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் நிலையை நாம் மறக்க முடியாது. ஆட்சிக்காக அவர்கள் எப்படி பேசினாலும் அடிமனத்தில் தமிழுணர்வால் உந்தப்பட்டவர்கள். இந்திய அமைதிப்படை திரும்ப வந்தபோது அதை வரவேற்க நான் போகமாட்டேன் என்று சட்டசபையில் அறிவித்தவர் கருணாநிதி. அப்போதும் அவர் முதல்வர். அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்தார். இப்போது காங்கிரஸின் ஆதரவு அவர்க்கு தேவைப்படுகிறது. முதிர்வும் உடல்நலமும் அவரை மனரீதியாக மாற்றிவைத்திருக்கிறது. தனக்குப் பின் திமுகவும் தன்னுடைய பிள்ளைகளும் என்ன ஆவார்கள் என்னும் கவலை அவரை வாட்டுகிறது. அதனால் ஆட்சி தக்கவைக்கப்படவேண்டும் என்னும் சூழல் அவரை நெருக்குகிறது. அதனால் ஜெயலலிதா சொன்னவர்களயும் தங்கபாலு போன்ற காங்கிரசு தலைவர்கள் சொன்னவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழலை உள்வாங்கிக் கொள்கிறார் அவர். தமிழர்களின் துரோகி என்னும் பட்டம் பின்னாலே வந்துக் கொண்டிருப்பதையும் அவரால் உணரமுடியாமல் இல்லை. அதற்காகவே ராமதாசு போன்றவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் யாரென்றே தெரியாது என்று வேறு தமிழினத்தைக் காக்கக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் கோ.க.மணி சொன்னார். ஒரு வார்த்தைக் கூட டில்லியில் அமைச்சராக வேலை பார்த்த சின்ன ராமதசு சொல்லவேயில்லை என்பது வேறு பிரச்சனை.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரசுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் கருணாநிதி. அதனால் அவருக்கு தமிழர்களின் எதிர் இருப்பு என்பது இந்த தேர்தலில் கிடைத்து இருக்கின்றது.தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் கலைத்துவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் அவர். ஆனால் காலமெல்லாம் அவர் ஈழத்தமிழரின் ஆதரவாளர். தனி ஈழம் குறித்த அக்கறை உள்ளவர். இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.
ஜெயலலிதா அவர்கள் அவருடைய தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆத்ம நேசிப்புக்கு உரியவர் என்பதையும் மறந்து விட்டு ஈழத்தமிழர்களை கொல்வதற்கு ஆதரவாக இருந்தவர். இந்த தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுத்து இருக்கிறார். இது வரவேற்க வேண்டியது தான். தமிழர்களின் பெரும்பான்மையாய் உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுக. அதன் தலைமை தமிழர்களுக்கு எதிராக இருப்பது என்பது வருத்தமானதாகவே இருந்தது. ஆனால் இந்த மாறுதல் என்பது கொள்கைப் பூர்வமானதா என்பதுதான் நம் கேள்வி.ஸ்ரீஸ்ரீ ரவிச்சந்திர சுவாமிகள் கொடுத்த குறுந்தகடுகளைப் பார்த்தபின் தான் மாறிவிட்டேன் என்று அவர் சொல்வதுதான் இன்னும் மோசமானதாக இருக்கிறது. தமிழர்கள் இவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். இது குறித்து நாம் வினவ வேண்டியிருக்கிறது. இதுவரை துன்பப்படும் தமிழர்கள் குறித்து ஒரு செய்தியையும் ஜெயலலிதா படிக்கவோ பார்க்கவோ இல்லையா? அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று இங்குள்ள தலைவர்கள் சொன்னபோது அப்படியா உண்மையாகவா என்று எதையும் ஆராயமலோ அல்லது தெரிந்துக் கொள்ள முயலாமலோ எப்படி அரசியல் பணியாற்ற முடியும்? அதற்காக பேசியவர்களை, போராடியவர்களை கைது செய்ய சொன்னதெல்லாம் எதையும் அறியாமலேதான் சொன்னீர்களா?

போர் நிறுத்தம் வேண்டும் என்று அனைவரும் கேட்டபோது இலங்கை என்பது வேறொரு நாடு அதன் உள்நாட்டு விவகாரத்தில் எப்படி நாம் தலையிடுவது என்று மத்திய காங்கிரசு மந்திரி சொல்வதைப் போலவே பேசிய ஜெயலலிதா இப்போது தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என்று கூறுகிறார். இது சாத்தியமா? ஜெயலலிதா சொன்னால் எல்லாம் சாத்தியம் தான். உதாரணம் வேறு காட்டினார். காட்டுக் கொள்ளையன் வீரப்பனை பிடித்துக் காட்டுவேன் என்று கூறினேன் பிடித்துக் காட்டினேனா இல்லையா? என்றார். அந்த உரையைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு ராமதாசும் என்னுடைய நண்பர் சந்தனக்காடு என்னும் மிகச்சிறந்த தொடரை இயக்கிய கௌதமனும்தான் நினைவுக்கு வந்தனர். வீரப்பனை எப்படி காவல்துறை கொன்றது என்பதை உண்மை அறியும் குழுவாக சென்று கண்டுபிடித்தவர்கள் சொல்வார்கள்.ஆனால் வீரப்பனை தன்னுடைய தொலைக்காட்சிக்கு பயன்படுத்திக் கொண்ட ராமதாஸ் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வீரப்பனை விசாரிக்காமல் கொன்றது தவறு என்று தன்னுடைய சகோதரிக்கு சொல்லமாட்டார். ஏனென்றால் கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவார். ஆனால் திமுக கூட்டணியில் இருந்தால் தின்ந்தோறும் அவருக்கு தீபாவளிதான்.
இது இருக்கட்டும் இன்னொரு அரசியல் கட்டுரையாக வரும் அது.ஆனால் ஜெயலலிதாவின் இன்னொரு கூற்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.தனி ஈழம் என்றுதான் சொன்னாராம். தனி நாடு என்று சொல்லவில்லையாம்.தனி நாடு அல்லாத தனி ஈழம் என்பது என்ன வைகோ விளக்குவதற்கு அவருக்கு நேரம் இருக்காது. விருதுநகரை அவர் வென்றாகவேண்டும்.
இப்படி தேர்தலுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை முன்வைத்து அரசியலை நகர்த்துகிறார்கள் தமிழ்நாட்டுத்தலைவர்கள். இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் யார் வென்றாலும் பரவாயில்லை என்னும் இந்திய அரசியலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் தமிழ் உணர்வாளர்களின் கூற்று.
தமிழர்கள் இந்த தேர்தலில் என்னதான் செய்ய வேண்டும்? கண்டிப்பாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும்.அதற்குரிய 16 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. இது போலி தேசியம் பேசுகின்ற அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உண்மையான ஈழ மக்கள் நேசிப்பு, இடஒதுகீடு நிலைநிறுத்தப் பட, சமுக ஜனநாயகம் தழைக்க, பார்ப்பன ஆதிக்கத்தினை தலையெடுக்காமல் செய்ய வேண்டும் என்றால் மீதி இடங்களில்அதிமுகவின் மாற்று அணிதான் வெல்ல வேண்டும்.

Tuesday, March 31, 2009

கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்



ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும்
சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட
போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க
இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர். யாரிடம் தமிழர்கள் தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்த வேண்டுமோ
அவர்கள் சொல்லுவதற்கு இனிமேல் கட்டுபட்டு நடப்பதாக உறுதிக்கூறிய பிறகுதான் அண்ணன் தங்கை பாசமே மலர்ந்திருக்கின்றது. கருணாநிதியிடம் இப்படி ஒரு உறுதியை
ராமதாஸ் தரவில்லையோ. சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறக்காமல் கருணாநிதி ராமதாஸிடம் இவ்வுறுதிமொழியை வாங்கிவிடுவாராக.
அதிமுக கூட்டணியில் முதன்மைக் கூட்டாளியாக இருந்த மதிமுக இப்போது என்னவாக இருக்கின்றது? தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை திமுக தரவில்லை
என்பதற்காக கடந்த தேர்தலில் திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வெட்டுருக்களைக்கூட மறந்துவிட்டு இரவோடிரவாக அதிமுக அன்புச்சகோதரியின் கூடாரத்திற்குப் போன
வைகோ இப்போது தன்மான உணர்ச்சியினை எங்கு வைப்பார்? இப்போதுதான் உள்ளே வந்த பாமக விற்கு ஏழு தொகுதிகள் ஒரு மக்களவை என்றும் எந்தெந்த தொகுதிகள்
என்றும் முடிவாக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் அண்ணனுக்கு தயாராக தட்டில் சீட்டுகளை வைத்திருக்கும் சகோதரிக்கு கூடவே இருந்த சின்ன அண்ணன் இன்னும்
போயஸ் தோட்ட சமையலறையின் வாசலில் நிற்பது தெரியாமலே இருக்கின்றது.சட்டமன்றத்தில் எதற்காக வருகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளியே
வந்த உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களைப்போலவே வெளியே வந்த மதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையே முற்றுப்பெறவில்லை. கேட்பது எத்தனை கிடைப்பது எத்தனை என்பதனை
உணர்ச்சிப் பெருக்கோடு வைகோ சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
பொதுவுடைமை தோழர்கள் காங்கிரஸ் சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. நந்திகிராமில்
விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்தான் நமக்கு ஞாபகம் வந்து தொலையுதே. அவர்களும் சீட்டுக்காகத்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார்கள்.அதுமட்டுமல்ல
எனக்கு திடீரென்று இப்போது இன்னொரு பிரச்சினை நினைவுக்கு வருகிறது. மதுரை உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காய் பாடாய் பட்டவர்கள்
அப்போது அதைகுறித்து எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா இப்போது எப்படி தோழர்களின் பிள்ளை சமூக எதிர்ப்பை அல்லது தலித் அல்லாத மக்களின்
எதிர்ப்பை தாங்கிக்கொள்வார்? தோழர்கள் இதைகுறித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருக்கட்டும்.
திமுக கூட்டணி திமுக 21 காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லிம் லீக் 1. பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் வெறும் மூன்று. முக்கிய மந்திரியாக
மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரஸின் பலத்தை தீர்மானித்து தந்தவை. 80 இடங்கள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ்
கட்சி ஆட்சியிலிருந்து இறங்காவண்ணம் காத்த கண்ண பரமாத்மா முலாயம் சிங் தர முன்வந்ததோ வெறும் 15 இடம். வடமாநிலங்களிலேயே இவ்வளவு பலவீனப்பட்ட
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 40க்கு 16 ஏன்? அவ்வளவு பலம் உள்ளதா காங்கிரஸ் கட்சி. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனைப்பேருக்கு ஒரு கோஷ்டி இருக்கின்றது
தொகுதிக்குப் பிறகு வேட்பாளர் தேர்வுக்குப்பின் பாருங்கள் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் காரர்களே தொகுதிக்குகுள் விடமாட்டார்கள். அத்தகைய ஒற்றுமை வலிமை
கொண்டது. கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லாத காங்கிரஸ் நாட்டு ஒற்றுமைப் பற்றி என்ன செய்யமுடியும்? அதுவும் தமிழ்நாட்டில் தனித்து காங்கிரஸ் நிற்குமே என்றால்
கட்டுத்தொகையினை இழக்கும் கட்டாயம் அதற்கு வரும். அப்படியிருக்க ஏன் இத்தனை இடங்களை திமுக ஒதுக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியைக் காக்க பலமில்லாத
காங்கிரஸுக்கு இப்படி வாரி தருவது எப்படி நியாயம். தன்னுடைய பலத்தை விட காங்கிரஸ் அதிக பதவி சுகத்தை அனுபவிப்பது தமிழகத்தில்தான். அதுவும் தமிழர்களின்
உணர்வுகளுக்கு எதிராக இருந்துக்கொண்டே.
தொண்டர் பலமுள்ள கட்சி என்று பார்த்தால் திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆனால் அதற்கு இரண்டே இடங்களைத்தாம்
ஒதுக்கியிருக்கிறார்கள். இதுகூட திருமாவளவனின் அளவு கடந்த பொறுமையினால் கிடைத்தது. அவரின் வழக்கமான உணர்ச்சிவசப்படும் தன்மையினை இந்த முறை
கொஞ்சம் ஒதுக்கிவைத்ததால் வந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை பொதுத்தலைமைக்கும் அதுமட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலை முன் இழுக்கும் தலைமையும்
அவருக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த கூட்டணி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்தேசிய அரசியல் தொடங்கிய அவரின் போக்கு தலித்
தோழமைகளை இழந்து நிற்கிறது.கூடவே இருப்பார் என்று கருதப்பட்ட ராமதாஸ் இப்படி மீண்டும் தன் சுய சாதிக்குள்ளேயே அமுங்கிவிடுவார் என்பதை திருமாவளவன்
அறியவில்லை.
இத்தனை கூத்துகளும் அரங்கேறும் இடமாக தமிழக அரசியல் இருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த அடையாளமோ தமிழ் அரசியலோ இல்லை என்பது தான் உண்மை. வேறு
எந்த தேசிய இனத்திற்கும் இல்லாத கொடுமை இது. தன் தேசிய தன்மை இல்லாமலே தங்களை ஆளுபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அந்த இனம் பங்கேற்பது.

Thursday, March 26, 2009

பறை: அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

பறை: அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

பா.ம.க. தன்னுடைய பொதுக்குழுவில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த முடிவை பெரிய ஜனநாயகத் தன்மையுடையதாகக் காட்டிக்கொண்டு ஓட்டுப்போட்டு அணி மாறியுள்ளது. மிகவும் தனித்தன்மையுடன் அல்லது ஆய்வின் அடிப்படையில் இயங்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்றா நம்பிக்கையினை அது மீண்டும் மண் போட்டு புதைத்துவிட்டது.
எந்த விதத்திலும் திமுகவின் தன்மைக்கு குறைந்ததல்ல அதிமுக. அதன் தலைமை அடிக்கும் அரசியல் கூத்துகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனைக்கூட பொருட்டில்லைதான். இவ்வளவு நாள் எதிர் நிலையிலிருந்துவிட்டு தேர்தல் நெருங்க ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு வேளை தமிழர்களின் ஓட்டுகளை மாற்றிவிடுமோ என்று செயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ஒருவேளை அது தா.பா அல்லது வைகோ வாக கூட இருக்கலாம் சொல்லிவிட அவரும் ஈழத்தின் பிரச்சினை தீர மத்திய அரசை அவர் வழக்கமாக வசாடும் மாநில அரசைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் தமிழர்களால் முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று யார் சொன்னார்கள்? தமிழர்கள் என்ன அவ்வளவு கொள்கைரீதியாக சிந்திக்க கூடியவர்களா? பாவம் அவர்கள். அதைத்தான் இவர்கள் எல்லாம் இலாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கிருந்து பேசினால் என்ன எதை பேசினால் என்ன எப்படி பேசினால் என்ன எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாஸ் நிறுவிவருகிறார். அவரின் தேர்தல் உத்தி என்று இதை யாராவது சொல்வார்களேயானால் அதற்கு வேறு ஏதாவது சொற்களைத்தான் தேட வேண்டும். காத்திரமாக அல்ல மிகவும் நிதானமாக அவதானித்தே இதைச் சொல்வோம். இவ்வளவு காலம் ஈழத்த்மிழர் பிரச்சினையில் மற்ற தமிழ்தேசிய தன்மையுள்ள இயக்கங்களுடன் கலந்து போராடி தமிழ் அடையாளத்துடன் உலகளவில் தன்னையும் தமிழர்களைக் காக்கும் தலைவராகக் காட்டிக்கொண்டு அரசியல் நடத்திய ராமதாஸ் இப்போது அதை மிகவும் லாவகமாக கைவிட்டார். பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தி இதைச் செய்ததாக மக்களுக்கு அறிவிக்கிறார். என்ன இது? கட்சி மாறுவது என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்றை இவர் அறியாததைப் போலவே நடந்துகொள்வது என்பது நாடகமின்றி வேறென்ன இருக்க முடியும்.
காங்கிரஸை விட்டு அவர் வரவில்லை. திமுகவை விட்டுதான் வந்திருக்கிறார். பிரதமர் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கடந்த அய்ந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி கூறுகிறார். அப்படி கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பு என்பது பரஸ்பரமானது தானா? தமிழர்களுக்கு எதிரான ஆய்த நடவடிக்கைகளிலும் இந்த ஒத்துழைப்பு இருந்திருக்குமா? நாம் மிகவும் மதித்த ராமதாஸ் அவர்களுக்கு மட்டுந்தான் தெரியும் இது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை செவ்வனே செய்வதற்கு இன உணர்வும் மான உணர்வும் தேவையில்லை. அடிமைத்தனம் இருந்தால் போதுமானது. டில்லியில் இருந்த ஒரு நாளில் கூட ஈழத்தமிழருக்காக அன்புமணி ஒரு போராட்டத்தையும் மத்திய அரசை எதிர்த்து நடத்தவில்லை. மாறாக நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். பீகார் மக்கள் மும்பையில் தாக்கப்பட்டபோது லாலு அவர்கள் செய்த கிளர்ச்சியினை நாம் சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் அநீதியைக் கண்டித்து இந்த கூட்டணியில் இடம் பெறவில்லை பாமக. திமுகவைவிட எந்த விதத்தில் அதிமுக நல்லது என்பதையும் தமிழருக்கு சொல்லி அதன் மூலம் அந்த கூட்டணியில் இடம் பிடிக்கவில்லை. சரி, ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்தா? அல்லது சேது சமுத்திர திட்டத்தினை முன்வைத்தா?அல்லது உயர் மருத்துவம் தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது அதை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்திற்கு செயலலிதா ஆதரவு தந்தார் என்பதற்காகவா?
எதுவுமே மருத்துவர் ராமதாஸுக்கோ அல்லது அக்கட்சியின் முன்னணியினருக்கோ தெரியாது.பிறகு எப்படி என்கிறீர்களா? பொதுக்குழுவில் அவருடைய கட்சியினர் ஓட்டு போட்டனர் அதனால்தான்.
இங்கே தான் நமக்கு சந்தேகமே ஆரம்பமாகிறது. சந்தேகமே இல்லாமல் அது மார்க்ஸ் சொன்ன சந்தேகம் தான். பாமக என்பது இன்னும் முழுமையான பொதுவான கட்சியாக இல்லை. அப்படி பொதுவான கட்சியாக இருக்கும் பட்சத்தில் அதன் பொதுக்குழுவில் ஓட்டளித்தவர்கள் எத்தனைப்பேர் வேறு சாதியினர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் அற்ற காலங்களில் அவர் பொதுவான தமிழர்களை வைத்துக் கொள்வார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தொலைக்காட்சியும் செய்தித்தாளும் இருக்கும். அதில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் அறிஞர்கள் பனியாளர்களாக இருப்பார்கள். இசை குறித்தும் தமிழ் வளர்ச்சிக் குறித்தும் ஊடக வளர்ச்சிக்குறித்தும் படைப்பாளிகள் சங்கம் குறித்தும் தன்னுடைய ஊடகத்திற்கு போதுமான விளம்பரம் பெறுவது குறித்தும் பெரிதும் அவர் விவாதிப்பார். கல்வி குறித்து விவாதிக்க கல்வியாளர்களையும் அழைப்பார். உண்ணாவிரதம் இருந்து திருமாவளவன் போராடினால் ஓடிவந்து குளிர்பானம் கொடுத்து அவருடைய போராட்டத்தை முனைமழுங்க செய்வார். இதெல்லாம் செய்துவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்களிடையே கருத்துக்களைக் கேட்காமல் தன் கட்சியின் பொதுக்குழுவில் தஞ்சம் அடைவார். அவர்கள்தான் வேலை செய்யப்போகிறவர்கள். யார் அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல சாதிக்காரர்கள். தன்னுடைய சாதி என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவர் சென்றுவிடுவது வாடிக்கையாக இருக்காது. அது வழக்கமானது. தமிழ் அறிஞப் பணியாளர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழப்பிரச்சினையில் கருணாநிதிக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அவ்வளவு பொறுப்பு ராமதாஸுக்கும்தான் இருக்கிறது. அதிகாரத்தின் போதையை கடைசி சொட்டுமட்டும் சுவைத்து விட்டு இன்று பரிசுத்த ஆவியால் துடைக்கப் பட்டவர்களைப் போல அவர்கள் மாறியிருக்கிறார்கள். தமிழருக்கும்,தமிழ்தேசியத்திற்கும் பகுத்தறிவுக்கும் எவ்வளவு காங்கிரஸ் விரோதியோ அதைவிட பன்மடங்கு விரோதி செயலலிதா.அவரின் இந்துத்த தன்மை வெளிப்ப்டையானது. யாருக்கும் எதற்கும் அஞ்சாதது. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு வேளை பாஜகவுக்கு வருமேயானால் இப்போது கூட இருக்கும் நட்புகளை விட்டுவிட்டு சென்று விடுவதற்கு அவருக்கு தயக்கமே இருக்காது. எங்கே பிராமணன் என்று சோவை விட்டு ஜெயா தொலைக்காட்சியில் வருவது இன்னும் சில நாட்களில் மக்கள் தொலைக்காட்சியில் வந்தால் பாவம் தமிழ்ப்பண்ணையில் சந்திப்பிழைகளுக்கெல்லாம் சண்டை போடும் நன்னர்கள் என்ன செய்வார்களோ?இதைவிட முக்கியமான அக்கறை நமக்கொன்று உண்டு திருமாவளவன் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அது.

Saturday, March 21, 2009

பறை: சினிமாவின் அரசியல்

பறை: சினிமாவின் அரசியல்