Monday, June 29, 2009

போதலின் தனிமை


எல்லைகளைக் கடக்கின்ற பாதங்களில்
குவிந்திருக்கின்றது வழி

தன்னை மீட்க கடந்த தொலைவின்
நிழல் கசிந்த ஒரு நொடியில் ஆனது அனைத்தும்

வரவின் கூடலில் வந்தமரும் குருவிகளிடம்
இருப்பிடம் கேட்க
இறக்கையினை அடிக்கின்றன அவை

பேச்சரவம் அரவத்தினைப் போல
சுருண்டுக் கிடக்க
வார்த்தைகள் வாலாட்ட முனையாமல்
பம்முகின்றன
போகவேண்டிய இடம் குறித்த பிரக்ஞையில்

Friday, June 26, 2009

இன்னும் முடியாத உங்களின் விவாதங்களை
என்ன செய்யமுடியும் உங்களால்
செவிகள் மறுத்த சொற்கள் மீள்கின்றன
மீண்டும் எங்களிடம்
சொற்களை அனுப்புவதற்குப் பதில்
கணைகளை வீசுகின்றீர்
கணைகள் நேரிடையானவை ஒரு சாதிவெறியனைப் போலெனின்
எங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவோம்
நட்பை கணைகளாக்கும் உங்கள்
தத்துவம் புரியாமல்
நிற்கிறோம்
எனினும் போர்க்காலம் என்பதை
மேகங்கள் தீர்மானிப்பதில்லை