Monday, May 4, 2009

தமிழர்களின் தேர்தல்

http://தம்ழர்களின் தேர்தல்
தமிழீழப் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு அது அறுவடை செய்வதற்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தேர்தல் வரப்போகிறது, இறுதியும் மூன்றாவது கட்ட தேர்தலில் தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி நடக்கிறது. மொத்தம் 107 மக்களவை தொகுதிகளில் மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கிறது. அதில் 40 தொகுதிகள் தமிழ் பேசக்கூடிய அல்லது தமிழர்களின் ஒட்டு மொத்த ஓட்டுகள் பதிவாகக் கூடிய இடங்கள்.
இந்த தேர்தல் மற்ற தேர்தல்களைவிட முக்கியமான ஒன்று. ஏனென்றால் ராஜிவ் படுகொலையை காரணமாக வைத்து யாரும் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பேசுவதில்லை. அப்படி பேசுபவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக பார்க்கப்படுவதும் தடா பொடா போன்ற கொடும் சட்டங்களில் மாட்டி வைக்கப்படுவதும் நடந்துக்கொண்டிருந்தது. மதுரை திருமங்கலம் பொதுக்கூட்ட்த்தில் பேசியதற்காக வைகோ உட்பட பத்து பேர் பொடா சட்ட்த்தில் சிறையில் அடைக்கப்பட்டு பத்தொன்பது மாதம் சிறையில் அடைக்கப் பட்டார்கள் அதுவும் தற்போது அவர் மிக பிரமாண்டமாய் நம்பியிருக்கும் அவரின் தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது. தற்போது முதல்வராக இருப்பவர் அதை எதிர்த்து போராடினார்.வைகோவை விடுதலைச் செய்ய முதல் கையெழுத்தைப் போட்டார். அவர் இப்போது முதல்வராக இருக்கும்போது ஈழத்தமிழருக்காக யாராவது பேசினால் தேசியப்பாதுகாப்பு சட்ட்த்தில் போடுகிறார். சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.
தற்போதைய தேர்தல் தமிழ்நாட்டு தமிழர்களை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தேர்தலின் முக்கிய பிரச்சனையாக வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈழத்திற்கு ஆதரவாக யார் இருந்தார்கள் தற்போது யார் இருக்கிறார்கள் என்பதுதான். காலங்காலமாய் ஈழத்தமிழர் பிரச்சனையில் கவனம் செலுத்தி அதில் தன் பங்களிப்பை தந்து கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி. அதற்காக அவர் செய்தவற்றை எல்லாம் அவரே பட்டியல் போட்டு காண்பித்திருக்கிறார். அண்மையில் விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அதற்காக தான் ஒரு மாநில முதல்வர் என்னும் நிலை கடந்து இரங்கல் பா எழுதினார். அது மிகப்பெரிய தேசத்துரோகமாக செல்வி.ஜெயலலிதா அவர்களால் பேசப்பட்டது.ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்னும் கோரிக்கையும் ஜெயலலிதா அவர்களால் வைக்கப்பட்டது.
ஈழத்தில் மகிந்த ராசபக்சேவும் கோத்தபய ராசபக்சேவும் சேர்ந்து மாபெரும் இன அழிப்புப் போரை தொடர்ந்த போது தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. முத்துக்குமாரின் மரணமும் அவரின் கடிதமும் மாணவர்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் இப்பிரச்சனைக்குறித்த வீரியத்தை கூட்டின. தமிழ் திரைக்கலைஞர்கள் நட்த்திய ராமேசுவரம் பேரணியும் அதில் சீமான் ஆற்றிய உரையும் ஈழத்தமிழருக்கான ஆதரவினை தமிழர்கள் மத்தியில் வேகமாக்கின. வழக்கறிஞர்களின் போராட்டங்கள், மாணவர்களின் போராட்டங்கள் வேகமாயின.
தேர்தல் களமும் கொஞ்சம் கொஞ்சமாய் அமைந்தது.வழக்கமான அணி மாறலுக்கு தயாரானார் ராமதாசு. அதற்காக போர்நிறுத்தம் பற்றி பேசினார். போர்நிறுத்தம் செய்ய என்னவெல்லாம் திமுக செய்யவேண்டும் என்று கருதினாரோ அதையெல்லாம் பாமக வும் செய்ய வேண்டும் என்பதை லாவகமாக மறந்து கருணாநிதியை தாக்க ஆரம்பித்தார். விடுதலைச் சிறுத்தைகள் ராம தாசை மனப்பூர்வமாக நம்பியது. அவர் பேச்சைக்கேட்டு உண்ணாவிரதத்தைக் கூட முடித்துக்கொண்டார் திருமாவளவன். தா. பாண்டியன் போன்றவர்கள் அதிமுக கூட்டணிக்கு தாவ தயாராய் இருந்தனர். ராமதாசும் தயாராகிவிட்டார் என்று அவரின் நடவடிக்கைகள் காட்டின.
இந்த நேரத்தில் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர் குறித்து உதிர்த்தவை முக்கியமானவை. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனரே என்றால் போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுதான் ஆவார்கள் என்றார். ஈழம் என்னும் ஒரு வார்த்தையே இல்லை என்றும் அவர்கள் ஈழத்தமிழர்கள் அல்ல இலங்கைத்தமிழர்கள் என்றும் முழக்கினார்.
ஈழ ஆதரவு தலைவர்கள் இரண்டு அணிகளாய் பிரிந்தனர். ஒரு அணி அதிமுகவுடன் மற்றொன்று திமுகவுடன். தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனைய முக்கியமாக தமிழர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்று ஜெயலலிதாவுக்குச் சொல்லப்பட்டு தன் நிலைப்பாட்டிலிருந்து மாறுகிறார் ஜெயலலிதா. காங்கிரசுக்கூட்டணிக்காக அவர் காத்திருந்த போது ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசினார். ராசபக்சேவின் தங்கையாகவே இருந்தார்.அதனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருக்கிறார் கருணாநிதி என்று சோனியாவுக்கு ஞாபகப்படுத்தி ஆட்சியைக் கலைக்க கூட கோரினார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது கருணாநிதியின் உள்ளம்தான். தன்னுடைய ஆட்சியைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் நினைத்தார். அதனால் தன்னுடைய நிலையிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். ஜெயலலிதா மிகவும் சரியாக இருப்பதாக காங்கிரசு தலைவர்களில் சிலபேர் பேசகூட ஆரம்பித்தனர். திருமாவளவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டார். அவர் கைது செய்ய சொன்ன சீமானை அப்போது கைது செய்திருந்த்து தமிழக அரசு. சட்டம் தன் கடமையினைச் செய்ய சொன்னார் தன்னுடைய கூட்டாளி வைகோவை கைது செய்தபோது. திருமாவளவன் கைது செய்யப்படாத்தற்கு என்ன காரணம் என்றார்.
ஆனால் தேர்தல் நெருங்கநெருங்க ஜெயலலிதா ஈழ எதிர்ப்பு என்னும் நிலையிலிருந்து மெல்ல மெல்ல தன் சாயத்தை மாற்ற ஆரம்பித்தார். தமிழகத்தின் தமிழர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக போராடுகிறார்கள் என்பதும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அதற்காக அவர்கள் ஆயுதமாக மாற்றப் போகிறார்கள் என்பதை அறிந்து மாறுகிறார். காங்கிரஸ் கூட்டணி வேறு இல்லை என்றாகிவிட்ட நிலையில் அமைந்திருக்கும் கூட்டணியில் உள்ள தா.பாண்டியன் போன்றவர்கள் நிலைமையை எடுத்துச் சொல்ல ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த்தை நாடகம் என்று வர்ணித்த அவர் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் நிலையை நாம் மறக்க முடியாது. ஆட்சிக்காக அவர்கள் எப்படி பேசினாலும் அடிமனத்தில் தமிழுணர்வால் உந்தப்பட்டவர்கள். இந்திய அமைதிப்படை திரும்ப வந்தபோது அதை வரவேற்க நான் போகமாட்டேன் என்று சட்டசபையில் அறிவித்தவர் கருணாநிதி. அப்போதும் அவர் முதல்வர். அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்தார். இப்போது காங்கிரஸின் ஆதரவு அவர்க்கு தேவைப்படுகிறது. முதிர்வும் உடல்நலமும் அவரை மனரீதியாக மாற்றிவைத்திருக்கிறது. தனக்குப் பின் திமுகவும் தன்னுடைய பிள்ளைகளும் என்ன ஆவார்கள் என்னும் கவலை அவரை வாட்டுகிறது. அதனால் ஆட்சி தக்கவைக்கப்படவேண்டும் என்னும் சூழல் அவரை நெருக்குகிறது. அதனால் ஜெயலலிதா சொன்னவர்களயும் தங்கபாலு போன்ற காங்கிரசு தலைவர்கள் சொன்னவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழலை உள்வாங்கிக் கொள்கிறார் அவர். தமிழர்களின் துரோகி என்னும் பட்டம் பின்னாலே வந்துக் கொண்டிருப்பதையும் அவரால் உணரமுடியாமல் இல்லை. அதற்காகவே ராமதாசு போன்றவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் யாரென்றே தெரியாது என்று வேறு தமிழினத்தைக் காக்கக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் கோ.க.மணி சொன்னார். ஒரு வார்த்தைக் கூட டில்லியில் அமைச்சராக வேலை பார்த்த சின்ன ராமதசு சொல்லவேயில்லை என்பது வேறு பிரச்சனை.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரசுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் கருணாநிதி. அதனால் அவருக்கு தமிழர்களின் எதிர் இருப்பு என்பது இந்த தேர்தலில் கிடைத்து இருக்கின்றது.தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் கலைத்துவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் அவர். ஆனால் காலமெல்லாம் அவர் ஈழத்தமிழரின் ஆதரவாளர். தனி ஈழம் குறித்த அக்கறை உள்ளவர். இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.
ஜெயலலிதா அவர்கள் அவருடைய தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆத்ம நேசிப்புக்கு உரியவர் என்பதையும் மறந்து விட்டு ஈழத்தமிழர்களை கொல்வதற்கு ஆதரவாக இருந்தவர். இந்த தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுத்து இருக்கிறார். இது வரவேற்க வேண்டியது தான். தமிழர்களின் பெரும்பான்மையாய் உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுக. அதன் தலைமை தமிழர்களுக்கு எதிராக இருப்பது என்பது வருத்தமானதாகவே இருந்தது. ஆனால் இந்த மாறுதல் என்பது கொள்கைப் பூர்வமானதா என்பதுதான் நம் கேள்வி.ஸ்ரீஸ்ரீ ரவிச்சந்திர சுவாமிகள் கொடுத்த குறுந்தகடுகளைப் பார்த்தபின் தான் மாறிவிட்டேன் என்று அவர் சொல்வதுதான் இன்னும் மோசமானதாக இருக்கிறது. தமிழர்கள் இவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். இது குறித்து நாம் வினவ வேண்டியிருக்கிறது. இதுவரை துன்பப்படும் தமிழர்கள் குறித்து ஒரு செய்தியையும் ஜெயலலிதா படிக்கவோ பார்க்கவோ இல்லையா? அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று இங்குள்ள தலைவர்கள் சொன்னபோது அப்படியா உண்மையாகவா என்று எதையும் ஆராயமலோ அல்லது தெரிந்துக் கொள்ள முயலாமலோ எப்படி அரசியல் பணியாற்ற முடியும்? அதற்காக பேசியவர்களை, போராடியவர்களை கைது செய்ய சொன்னதெல்லாம் எதையும் அறியாமலேதான் சொன்னீர்களா?

போர் நிறுத்தம் வேண்டும் என்று அனைவரும் கேட்டபோது இலங்கை என்பது வேறொரு நாடு அதன் உள்நாட்டு விவகாரத்தில் எப்படி நாம் தலையிடுவது என்று மத்திய காங்கிரசு மந்திரி சொல்வதைப் போலவே பேசிய ஜெயலலிதா இப்போது தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என்று கூறுகிறார். இது சாத்தியமா? ஜெயலலிதா சொன்னால் எல்லாம் சாத்தியம் தான். உதாரணம் வேறு காட்டினார். காட்டுக் கொள்ளையன் வீரப்பனை பிடித்துக் காட்டுவேன் என்று கூறினேன் பிடித்துக் காட்டினேனா இல்லையா? என்றார். அந்த உரையைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு ராமதாசும் என்னுடைய நண்பர் சந்தனக்காடு என்னும் மிகச்சிறந்த தொடரை இயக்கிய கௌதமனும்தான் நினைவுக்கு வந்தனர். வீரப்பனை எப்படி காவல்துறை கொன்றது என்பதை உண்மை அறியும் குழுவாக சென்று கண்டுபிடித்தவர்கள் சொல்வார்கள்.ஆனால் வீரப்பனை தன்னுடைய தொலைக்காட்சிக்கு பயன்படுத்திக் கொண்ட ராமதாஸ் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வீரப்பனை விசாரிக்காமல் கொன்றது தவறு என்று தன்னுடைய சகோதரிக்கு சொல்லமாட்டார். ஏனென்றால் கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவார். ஆனால் திமுக கூட்டணியில் இருந்தால் தின்ந்தோறும் அவருக்கு தீபாவளிதான்.
இது இருக்கட்டும் இன்னொரு அரசியல் கட்டுரையாக வரும் அது.ஆனால் ஜெயலலிதாவின் இன்னொரு கூற்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.தனி ஈழம் என்றுதான் சொன்னாராம். தனி நாடு என்று சொல்லவில்லையாம்.தனி நாடு அல்லாத தனி ஈழம் என்பது என்ன வைகோ விளக்குவதற்கு அவருக்கு நேரம் இருக்காது. விருதுநகரை அவர் வென்றாகவேண்டும்.
இப்படி தேர்தலுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை முன்வைத்து அரசியலை நகர்த்துகிறார்கள் தமிழ்நாட்டுத்தலைவர்கள். இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் யார் வென்றாலும் பரவாயில்லை என்னும் இந்திய அரசியலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் தமிழ் உணர்வாளர்களின் கூற்று.
தமிழர்கள் இந்த தேர்தலில் என்னதான் செய்ய வேண்டும்? கண்டிப்பாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும்.அதற்குரிய 16 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. இது போலி தேசியம் பேசுகின்ற அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உண்மையான ஈழ மக்கள் நேசிப்பு, இடஒதுகீடு நிலைநிறுத்தப் பட, சமுக ஜனநாயகம் தழைக்க, பார்ப்பன ஆதிக்கத்தினை தலையெடுக்காமல் செய்ய வேண்டும் என்றால் மீதி இடங்களில்அதிமுகவின் மாற்று அணிதான் வெல்ல வேண்டும்.