Wednesday, December 17, 2008

தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து

காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவு செய்து இருக்கின்றனர் தமிழின் தீவிர படைப்பாளிகள். அரை நூற்றாண்டாய் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப்பிரச்சனையில் தொடர் அக்கறையை செலுத்தி வந்தன என்றால் அது அவ்வளவு தவறில்லை. கொடுங்கனவாய் முடிந்துப் போன ராசீவ் காந்தி மரணத்துக்குப்பிறகு ஈழத்தமிழர் பிரச்சனைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.
துன்பப்படும் மக்கள்துயரின் காத்திரத்தைப் பேசினால் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. வைகோ,நெடுமாறன் போன்றோர் பேசியதற்காகவே நெடு நாளைய சிறை தண்டனையைப் பெற்றனர். பிறகான காலக்கட்டங்களில் எத்தனையோ அழிவுகளை சிங்கள பேரினவாத ராணுவம் தமிழ்மக்கள் மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு,செம்மணி புதைகுழி,செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலை என்று பட்டிலிடமுடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. உலக அரங்கில் அதற்குப் பின் இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில் தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மனசாட்சியை உலுக்க திரண்டது மக்கள் எழுச்சி.ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தி உடன்பாடில்லாத இடதுசாரிகள் கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறைக் காட்டினர். தீவிரமாக அரசும் இதில் கவனம் செலுத்தியது. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 19ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற திரை உலக போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் உள்ள அச்ச உணர்வினை நீக்கியது. இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோரின் வரலாற்று ரீதியான அரசியல் விரவிய உரை தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளத்திலும் பொதுவான அறத்தன்மையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகான அனைத்துக் கட்சியின் தமிழர் சங்கிலிப் போராட்டம் கொட்டும் மழையில் 100 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
தொடர்ந்துப் பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தியது.ஆனால் அறிவுலகம் எனப்படும் படைப்பாளிகள் அடர்ந்த மவுனத்தைக் கடைப்பிடித்தனர். பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்து பத்திகளாக கட்டுரைகளாக எழுதிக்குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறுஎந்த பிரச்சனையிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது. 19 ஆண்டுகாலமாக தலித் மக்களைப் பிரித்துவைத்த உத்தபுரத்தின் சுவர் வெளிச்சத்திற்கு வந்தபின் எத்தனை தமிழ் படைப்பாளிகள் தங்கள் வருத்தத்தையோ கோபத்தையோ பதிவு செய்தனர்? கயர்லாஞ்சியின் கொடுமைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டும் படைப்பாளிகள் ஒரு இயக்கமாகி ஏதும் சொல்லவில்லை.அதே போல ஒரிசா கர்நாடகாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை படைப்பாளிகள் அரங்கம் கண்டுகொள்ளவில்லை.
உலக அளவிலான வன்முறைகளயும் விடுதலைப்போராட்டங்களையும் மாங்கிமாங்கி எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்த சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை.
அதைத்தான் இக்கட்டுரையின் முதலில் சொல்லியிருந்தேன்.மவுனத்தைக் கலைத்த கவிஞர்கள் லீனா மணிமேகலைக்கும் சுகிர்தராணிக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம்.
இவர்கள் ஒருங்கிணைத்த தமிழ் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் சென்னை காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. காவல்துறையின் அனுமதிப் பெறுவதற்கு பெரும்பாடு பட்டதாக அவர்கள் கூறியது தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை எழுப்பியது. அதற்கான நிபந்தனைக் கடிதத்தையும் படித்தபோது அந்த உணர்வு இன்னும் மேலோங்கியது.
தமிழ் படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் வந்திருந்தனர். ராமேசுவரத்திலிருந்தும் இன்னும் பல மூலைகளிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருந்தது சிறப்பு. எந்தவிதமான அறிக்கையோ சுவரொட்டியொ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை என்று எந்த அரசியலும் இல்லாமல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சனநாயகத்தன்மை இருந்தது படைப்பு நேர்மையைக் காட்டியது.
கனிமொழியும் தமிழச்சியும் மிகவும் தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைத் துறந்து படைப்பாளிகள் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்காற்றியது அடுத்த தலைமுறை அரசியலின் போக்கை கணிக்கவைத்தது.
எழுத்தின் ஆங்காரத்தோடு ஒரு பயணியாக அறியப்படும் கோணங்கி நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதும் ஆகும்.

Tuesday, December 2, 2008

கவிதை ஒலிக்கும் அரங்கம்


நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி
ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்
படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.
மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும் இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு
இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.
அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்
என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது
மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர் எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள் தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை
ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.