Thursday, March 26, 2009

அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

பா.ம.க. தன்னுடைய பொதுக்குழுவில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த முடிவை பெரிய ஜனநாயகத் தன்மையுடையதாகக் காட்டிக்கொண்டு ஓட்டுப்போட்டு அணி மாறியுள்ளது. மிகவும் தனித்தன்மையுடன் அல்லது ஆய்வின் அடிப்படையில் இயங்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்றா நம்பிக்கையினை அது மீண்டும் மண் போட்டு புதைத்துவிட்டது.
எந்த விதத்திலும் திமுகவின் தன்மைக்கு குறைந்ததல்ல அதிமுக. அதன் தலைமை அடிக்கும் அரசியல் கூத்துகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனைக்கூட பொருட்டில்லைதான். இவ்வளவு நாள் எதிர் நிலையிலிருந்துவிட்டு தேர்தல் நெருங்க ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு வேளை தமிழர்களின் ஓட்டுகளை மாற்றிவிடுமோ என்று செயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ஒருவேளை அது தா.பா அல்லது வைகோ வாக கூட இருக்கலாம் சொல்லிவிட அவரும் ஈழத்தின் பிரச்சினை தீர மத்திய அரசை அவர் வழக்கமாக வசாடும் மாநில அரசைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் தமிழர்களால் முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று யார் சொன்னார்கள்? தமிழர்கள் என்ன அவ்வளவு கொள்கைரீதியாக சிந்திக்க கூடியவர்களா? பாவம் அவர்கள். அதைத்தான் இவர்கள் எல்லாம் இலாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கிருந்து பேசினால் என்ன எதை பேசினால் என்ன எப்படி பேசினால் என்ன எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாஸ் நிறுவிவருகிறார். அவரின் தேர்தல் உத்தி என்று இதை யாராவது சொல்வார்களேயானால் அதற்கு வேறு ஏதாவது சொற்களைத்தான் தேட வேண்டும். காத்திரமாக அல்ல மிகவும் நிதானமாக அவதானித்தே இதைச் சொல்வோம். இவ்வளவு காலம் ஈழத்த்மிழர் பிரச்சினையில் மற்ற தமிழ்தேசிய தன்மையுள்ள இயக்கங்களுடன் கலந்து போராடி தமிழ் அடையாளத்துடன் உலகளவில் தன்னையும் தமிழர்களைக் காக்கும் தலைவராகக் காட்டிக்கொண்டு அரசியல் நடத்திய ராமதாஸ் இப்போது அதை மிகவும் லாவகமாக கைவிட்டார். பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தி இதைச் செய்ததாக மக்களுக்கு அறிவிக்கிறார். என்ன இது? கட்சி மாறுவது என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்றை இவர் அறியாததைப் போலவே நடந்துகொள்வது என்பது நாடகமின்றி வேறென்ன இருக்க முடியும்.
காங்கிரஸை விட்டு அவர் வரவில்லை. திமுகவை விட்டுதான் வந்திருக்கிறார். பிரதமர் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கடந்த அய்ந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி கூறுகிறார். அப்படி கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பு என்பது பரஸ்பரமானது தானா? தமிழர்களுக்கு எதிரான ஆய்த நடவடிக்கைகளிலும் இந்த ஒத்துழைப்பு இருந்திருக்குமா? நாம் மிகவும் மதித்த ராமதாஸ் அவர்களுக்கு மட்டுந்தான் தெரியும் இது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை செவ்வனே செய்வதற்கு இன உணர்வும் மான உணர்வும் தேவையில்லை. அடிமைத்தனம் இருந்தால் போதுமானது. டில்லியில் இருந்த ஒரு நாளில் கூட ஈழத்தமிழருக்காக அன்புமணி ஒரு போராட்டத்தையும் மத்திய அரசை எதிர்த்து நடத்தவில்லை. மாறாக நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். பீகார் மக்கள் மும்பையில் தாக்கப்பட்டபோது லாலு அவர்கள் செய்த கிளர்ச்சியினை நாம் சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் அநீதியைக் கண்டித்து இந்த கூட்டணியில் இடம் பெறவில்லை பாமக. திமுகவைவிட எந்த விதத்தில் அதிமுக நல்லது என்பதையும் தமிழருக்கு சொல்லி அதன் மூலம் அந்த கூட்டணியில் இடம் பிடிக்கவில்லை. சரி, ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்தா? அல்லது சேது சமுத்திர திட்டத்தினை முன்வைத்தா?அல்லது உயர் மருத்துவம் தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது அதை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்திற்கு செயலலிதா ஆதரவு தந்தார் என்பதற்காகவா?
எதுவுமே மருத்துவர் ராமதாஸுக்கோ அல்லது அக்கட்சியின் முன்னணியினருக்கோ தெரியாது.பிறகு எப்படி என்கிறீர்களா? பொதுக்குழுவில் அவருடைய கட்சியினர் ஓட்டு போட்டனர் அதனால்தான்.
இங்கே தான் நமக்கு சந்தேகமே ஆரம்பமாகிறது. சந்தேகமே இல்லாமல் அது மார்க்ஸ் சொன்ன சந்தேகம் தான். பாமக என்பது இன்னும் முழுமையான பொதுவான கட்சியாக இல்லை. அப்படி பொதுவான கட்சியாக இருக்கும் பட்சத்தில் அதன் பொதுக்குழுவில் ஓட்டளித்தவர்கள் எத்தனைப்பேர் வேறு சாதியினர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் அற்ற காலங்களில் அவர் பொதுவான தமிழர்களை வைத்துக் கொள்வார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தொலைக்காட்சியும் செய்தித்தாளும் இருக்கும். அதில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் அறிஞர்கள் பனியாளர்களாக இருப்பார்கள். இசை குறித்தும் தமிழ் வளர்ச்சிக் குறித்தும் ஊடக வளர்ச்சிக்குறித்தும் படைப்பாளிகள் சங்கம் குறித்தும் தன்னுடைய ஊடகத்திற்கு போதுமான விளம்பரம் பெறுவது குறித்தும் பெரிதும் அவர் விவாதிப்பார். கல்வி குறித்து விவாதிக்க கல்வியாளர்களையும் அழைப்பார். உண்ணாவிரதம் இருந்து திருமாவளவன் போராடினால் ஓடிவந்து குளிர்பானம் கொடுத்து அவருடைய போராட்டத்தை முனைமழுங்க செய்வார். இதெல்லாம் செய்துவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்களிடையே கருத்துக்களைக் கேட்காமல் தன் கட்சியின் பொதுக்குழுவில் தஞ்சம் அடைவார். அவர்கள்தான் வேலை செய்யப்போகிறவர்கள். யார் அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல சாதிக்காரர்கள். தன்னுடைய சாதி என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவர் சென்றுவிடுவது வாடிக்கையாக இருக்காது. அது வழக்கமானது. தமிழ் அறிஞப் பணியாளர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழப்பிரச்சினையில் கருணாநிதிக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அவ்வளவு பொறுப்பு ராமதாஸுக்கும்தான் இருக்கிறது. அதிகாரத்தின் போதையை கடைசி சொட்டுமட்டும் சுவைத்து விட்டு இன்று பரிசுத்த ஆவியால் துடைக்கப் பட்டவர்களைப் போல அவர்கள் மாறியிருக்கிறார்கள். தமிழருக்கும்,தமிழ்தேசியத்திற்கும் பகுத்தறிவுக்கும் எவ்வளவு காங்கிரஸ் விரோதியோ அதைவிட பன்மடங்கு விரோதி செயலலிதா.அவரின் இந்துத்த தன்மை வெளிப்ப்டையானது. யாருக்கும் எதற்கும் அஞ்சாதது. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு வேளை பாஜகவுக்கு வருமேயானால் இப்போது கூட இருக்கும் நட்புகளை விட்டுவிட்டு சென்று விடுவதற்கு அவருக்கு தயக்கமே இருக்காது. எங்கே பிராமணன் என்று சோவை விட்டு ஜெயா தொலைக்காட்சியில் வருவது இன்னும் சில நாட்களில் மக்கள் தொலைக்காட்சியில் வந்தால் பாவம் தமிழ்ப்பண்ணையில் சந்திப்பிழைகளுக்கெல்லாம் சண்டை போடும் நன்னர்கள் என்ன செய்வார்களோ?இதைவிட முக்கியமான அக்கறை நமக்கொன்று உண்டு திருமாவளவன் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அது.

No comments: