Friday, February 19, 2010

தருணம்

தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்

Thursday, February 4, 2010

ஏதோ


தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்

யாழன் ஆதி

Friday, January 15, 2010

புத்தகக் கண்காட்சி : புத்தாக்கம் செய்யும் தளம்

எப்படியாவது கடைசி( 10/01/10) நாளன்றாவது புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விடவேண்டும் என்று மனது துடித்தது. கடந்த வாரம்(03/01/10) ஞாயிறன்றே புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத்தான் திட்டம். ஆம்பூரிலிருந்தே இமைகள் தோழர்கள் விஜயராஜனும் ஞானவேலும் ஆம்பூரின் அழகிய தமிழ்மகன் தேவாவும் நானும் செல்வதாகத்தான் திட்டமிட்டோம். இவர்களுடன் செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். என்னவென்றால் இலக்கியம் குறித்தும் சினிமா குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். சாப்பாடி பிரச்சினை இருக்காது. வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்டிப்பாக அதில் புளி சோறு இருக்கும் முட்டையுடன். படிக்குங்காலத்தில் எங்காவது சுற்றுலா செல்வது போன்ற உணர்வினைத் தரவல்லது அது. புத்தகக் கண்காட்சியிலும் எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்குவார்கள்.

இதில் என்னவாயிற்று என்றால் தேவா அச்சகத்தில் வேலை வந்துவிட்டது என்று நின்றுவிட்டார். திடீரென்று என்னுடைய அன்பிற்குரிய பேராசிரியர் அய்.இளங்கோவன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அவரைப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமானது எனவே நானும் போகவில்லை. நண்பர்கள் விஜயனும் ஞானவேலும் மாத்திரமே போயிருந்தார்கள். அங்கிருந்து நேரிடையாக வர்ணனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடனே புத்தகக் கண்காட்சியில் இருந்ததைப் போன்று இருந்தது.அடுத்த வாரம் போய்விட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.

அதனால் கடைசி நாளன்று கிளம்பிவிட்டேன். லால்பாக் தொடர்வண்டியில் ஏறி சென்னை அடைந்து தலித் முரசு அலுவலகத்திற்கு அங்கு ஆசிரியரை சந்தித்து மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தபோது மூன்று மணி. தொடர்வண்டியில் வரும்போது தம்பி சோழனுக்கு சொல்லியிருந்தேன். தம்பி சோழன் இயக்குனராவதற்கு முயர்சி செய்துகொண்டிருக்கும் தோழர். எங்கள் ஊர்க்காரர். கூத்துப்பட்டறையின் முக்கியமான நடிகராக இருந்து இப்போது வெளியேறி பயிற்சியாளராக இருக்கின்றாஅர். அதிகம் வாசிக்கக் கூடிய தம்பி. இந்தப் புத்தக கண்காட்சியில் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கின்றார் என்றால் புரியும் அவருடைய வாசிப்பு தாகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவரின் ஆர்வம் அவரை ஆசானாக மாற்றிக்கொண்டுள்ளது. சோழனின் வளர்ச்சி எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பேராசிரியர் அய்.இளங்கோவன் எழுதிய நூலின் ஆங்கிலப் பதிப்பை எடுத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்க அந்த பிரமாண்டத்துள் நுழைகிறேன். கருப்புப் பிரதிகள் நண்பர் நீலகண்டன் கொள்கை வழி பதிப்பாசிரியர். கண்டதையும் போட்டு பணம் பார்க்க அவர் எண்ணியதே கிடையாது. மாறாக அம்பேத்கர் பெரியார் மற்றும் விடுதலைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் நூல்களையே அவர் பதிப்பிப்பார். அவருடைய கடைக்குத்தான் நான் போகவேண்டும். உள்ளே நுழைந்ததும் அவர்தான் கண்ணில்பட்டார். அவரோடே கருப்புப் பிரதிகளுக்குச் சென்று புத்தகத்தை ஒப்படைத்தேன். அங்கே தோழர்கள் கவின்மலரும் சுகிர்தராணியும் வந்தனர். ஆளுக்கொரு வணக்கத்தைப் போட்டு, அப்போதுதான் வந்த விவரத்தையும் சொன்னேன். போய் அனைத்தையும் பார்த்துவருவதாகச் சொல்லிவிட்டும் போனார் சுகி. நானும் கவினும் புத்தகக் கண்காட்சியில் கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பெரிய பெரிய புத்தகங்கள், அழகழகான அட்டை வடிவமைப்புகள் எல்லா புத்தகங்களயும் வாங்கிவிடவேண்டும் என்று மனம் ஆவலாதித்தது. ஆனால் வழக்கமாக நமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி நம்மை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டது. நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கவிதைகளயே வாங்கவேண்டும் என்னும் முடிவோடுதான் சென்றிருந்தேன்.

கவினைக் கேட்டதற்கு பெரிய பெரிய புத்தகங்களை வானகச் சொன்னார்கள். அது நம்மால் ஆகாது என்று ஏற்கெனவே எடுத்த முடிவினை செயற்படுத்த ஆரம்பித்து கவிதைகளை வாங்கினேன். உயிர்மை விளம்பரப்படுத்தியிருந்த சில்வியா பிளாத் போன்றோரின் தொகுப்புகள் வராதது வருத்தமாக இருந்தது.வம்சி புத்தகங்கள் வடிவமைப்பில் புதிய பொலிவினைப் பெற்றிருந்தது. அங்கே கைக்கு அடக்கமாக ஒரு அழகிய புத்தகத்தை வாங்கினேன். வித்தியாசமான அமைப்புடன் இருந்த கிரியா வுக்குப் போனேன். அங்கே திரு.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். முன்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றிய போது அவரை சந்த்தித்து இருந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான் பார்த்தேன். அவர்களும் கைக்கு அடக்கமாகத்தான் புத்தகங்களை வடிவமைத்து இருந்தனர். ழாக் பிரேவரின் சொற்கள் தொகுப்பை வாங்கினேன். உயிர்மைக்கு வந்து சில கவிதை தொகுப்புகளை வாங்கினேன். அங்கே எஸ்.ராமகிருஷ்ணனும்,சாருவும் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் சட்டைப் பையில் விஐபி அட்டை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அது சொல்லவில்லையென்றாலும் அவர் விஐபி தானே!
நேரம் போதவில்லை மறுநாள் பள்ளிக்குப் போகவேண்டிய இருந்தது. சோழனை அனுப்பிவிட்டு தோழர் ஆர்.ஆர்.சீனிவாசனின் மின்னஞ்சல் அழைப்பிற்காக பூவுலகின் நண்பர்கள் அரங்குக்குச் சென்றேன். மிக நல்ல முயற்சி. சுற்றுச்சூழலுக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் அவர் எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, முயற்சிகளும் தோள் கொடுக்கப் பட வேண்டியவை. வாங்கி வந்திருக்கும் புத்தங்களை இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே இவ்வாண்டு எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்து இருக்கின்றது என்றால் பொய்யில்லை.

Thursday, October 29, 2009


அண்மையின் கைகளில் என்னைத் தந்துவிட்டு
செல்கிறது காலம்
அதன் துணிவுகளோடு செல்ல இயலாத என்னை
விட்டுவிட்டு சென்றுவிடுவதாக அச்சுறுத்துகிறது
திராணியற்ற ஒரு போர்ச்சேவகனைப் போல
என் வாளையும் போர் உடைகளையும் நான் களைந்துவிட்டு
காத்திருக்கின்றேன்
எதிரிகளின் தண்டனைகளை தரப்போகும் ஆணைகளுக்காய்
போரற்ற பிராந்தியத்தில் என்னை விடவேண்டும் என்னும்
எண்ணம் இருப்பதாய் சொல்லுகிறார்கள் உளவாளிகள்
ஆனாலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்கவும்
முடியாதென்கிறார்கள்
தாக்குதலற்ற போரும்
இழப்புகளற்ற அன்பும்
காதலிலும் இல்லை கண்மணி கிளாடி

அ.முத்துகிருஷ்ணனுக்குத் திருமணம்


அன்புமிக்க நண்பர் முத்துவுக்குத் திருமணம். 30.10.09 மாலை 6.00 மணியளவில் மதுரையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளன். கோணங்கியைப் போல பயணம் செய்யக்கூடியவர். மிக எளிமையான மனிதர். நுட்பமான தரவுகளையெல்லாம் எடுத்து கட்டுரைகளை எழுதக்கூடிய திறனுடையோர்.ஆங்கிலப்புலமையும் வடநாட்டில் அவரின் தொடர்பும் அவரின் எழுத்துகளுக்கு மிகவும் பயன் தரத்தக்கன.

முத்துக்கிருஷ்ணனை வாழ்த்துவோம் நண்பர்களே!

Tuesday, September 8, 2009

டேவிட். டி.பக் : படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின் அவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழை மறக்க முடியாத தீராத அன்புகொண்ட டேவிட் எழுபதுகளில் மீண்டும் தமிழகம் வந்திருக்கின்றார். மதுரையில் ஈராண்டுகள் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லித்தந்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் தமிழையும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.

தமிழின் மேல் மிக்க பற்றுடையவராகத் தன்னை மாற்றிக்கொண்ட டேவிட் தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.தமிழின் முக்கிய இலக்கியங்கள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்துள்ளார் டேவிட். அதில் மிகவும் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி.

ஒருமுறை டொராண்டாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனத்தின் கண்ணன் அவர்களைச் சந்தித்த டேவிட் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் ஒன்றைத் தர அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இருக்கலாம். தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் தமிழில் மிகமுக்கியமான நூல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளி தன் அனுபவங்களைப் பற்றி கூறி அவரின் படைப்புகளில் சிலவற்றை சேர்த்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதில் இருந்த எல்லா படைப்பாளிகளையும் சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். தலித்முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியன், முற்றுகை ஆசிரியர் திரு.யாக்கன் ஆகியோரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு பிறகு என்னைப் பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.

06.09.09 ஞாயிறு அன்று காலை பிருந்தாவன் விரைவு தொடர்வண்டியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். நம்முடைய சூழ்நிலையை அப்படியே தனதாக்கிக் கொள்ளக்கூடியவராக இருந்தார். அறுபதைக் கடந்தவர்.ஆனால் மிகவும் சுறுசுறுப்பானவர். என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சுற்றிக்காட்டினேன். பிறகு கஸ்பாவிற்கு வந்தோம். கொஞ்ச நேரம் தூங்கினார். பிறகு என்னுடைய பெற்றோர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன். எங்கள் தெருவில் அப்போது சிறுவர்களும் பெரியவர்களும் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் அவரும் கலந்துகொண்டார்.தெருவில் அமைர்ந்து அவர் பிள்ளைகளோடு தாயம் விளையாடியது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே வியப்பு. கூடுதலாக என்னவென்றால் அவர் பேசிய தமிழ்.அது அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

பிறகு மீண்டும் ஆம்பூரை சுற்றினோம். எங்கள் தலித் பகுதியின் நாட்டாண்மை திரு.வெங்கடேசனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.
‘இவர் எங்கள் சேரியின் தலைவர்’
’ஓ.. அப்படியா! வணக்கம்’ என்று கைகொடுத்தார் டேவிட்.
’ஐ யாம் ப்ரெசிடெண்ட்’ என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினார் எங்களூர் தலைவர்.
உடனே டேவிட் ’நாட்டாமை’ என்று சொன்னார். ஒரு நிமிடம் உறைந்த்ப் போனார் எங்களாவர்.

அடுத்து ஒரு பிரியாணி கடைக்குப் போய் மாட்டிறைச்சி பிரியாணி ருசி பார்க்கலாம் என்றேன். ஒரு பிளேட் வாங்கி கொஞ்சம் சாப்பிட்டார். அதன் ருசி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். முழுமையாக சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் அழகியபெரியவனின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என்று திட்டம். அதனால் நல்ல பிரியாணியையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பிறகு நேராக அழகிய பெரியவனின் வீட்டிற்குச் சென்று அங்கு அவருடன் உரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் சாப்பிட்டோம். அழகிய பெரியவனின் துணைவியார் மிகச்சிறப்போடு அன்புகலந்து சமைத்திருந்தார். மிக அருமையான சாப்பாடு. அங்கிருந்து பாலூர் என்னும் தலித் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தை மையமாக வைத்து அழகிய பெரியவன் கதை ஒன்று எழுதியிருந்தார். அந்த கிராமத்தைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் உரையாடிவிட்டு திரும்பினோம். வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம். ஆம்பூரில் அய்ந்து மணிக்கு பிருந்தாவன் பிடித்தால் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வந்து டிக்கெட் வாங்கினோம். ஒரு மணிநேரம் மிகவும் தாமதமாக வந்தது அந்தத் தொடர்வண்டி. ஆம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு பேசினோம். அவர் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போவதையும் அதற்காக அவர் பெங்குவின் நிறுவனத்தை அணுக இருப்பதையும் கூறினார். ஆம்பூர் மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும் கூறினார். வானத்தில் மேகம் சூழ்ந்தது. மழை தூறியது. டேவிட் தன் பையில் குடை வைத்திருந்தார். மழைக்குப் பிடித்துகொண்டார். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றேன். தனக்குப் பிடிக்காது என்றார். தொடர்வண்டி வந்தது. அன்போடு விடை கொடுத்தேன்.

Saturday, August 29, 2009

அதுவும்

எதையும் உதிர்க்கும் மரம் உன் லாவகத்தை சொல்கிறது
அதனினும் இன்னும் சிறப்பு உனக்கான சிரிப்பு
நீயற்ற வெளியெனினும் அதில் உன்னை நிரப்புகிறாய்
தயக்கமில்லாத உன் இயல்பு காற்றாலானது
கடந்துசெல்லும் உனது வாசம் துரோகமற்றது
எதிரிக்குரிய பார்வையும் நட்புக்குரிய உன் பிரிதலும்
எதற்குள் நம்மை தீர்க்கும் என்னும்
நெடுநாளைய வழக்கிற்குள் ஏகாமல்
மரத்தைப் போல் பூவொன்றை உதிர்த்துவிட்டு போ கிளாடி
பூக்களில் உள்ள எறும்புகள் கடிக்கலாம் என்னை