எப்படியாவது கடைசி( 10/01/10) நாளன்றாவது புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விடவேண்டும் என்று மனது துடித்தது. கடந்த வாரம்(03/01/10) ஞாயிறன்றே புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத்தான் திட்டம். ஆம்பூரிலிருந்தே இமைகள் தோழர்கள் விஜயராஜனும் ஞானவேலும் ஆம்பூரின் அழகிய தமிழ்மகன் தேவாவும் நானும் செல்வதாகத்தான் திட்டமிட்டோம். இவர்களுடன் செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். என்னவென்றால் இலக்கியம் குறித்தும் சினிமா குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். சாப்பாடி பிரச்சினை இருக்காது. வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்டிப்பாக அதில் புளி சோறு இருக்கும் முட்டையுடன். படிக்குங்காலத்தில் எங்காவது சுற்றுலா செல்வது போன்ற உணர்வினைத் தரவல்லது அது. புத்தகக் கண்காட்சியிலும் எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்குவார்கள்.
இதில் என்னவாயிற்று என்றால் தேவா அச்சகத்தில் வேலை வந்துவிட்டது என்று நின்றுவிட்டார். திடீரென்று என்னுடைய அன்பிற்குரிய பேராசிரியர் அய்.இளங்கோவன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அவரைப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமானது எனவே நானும் போகவில்லை. நண்பர்கள் விஜயனும் ஞானவேலும் மாத்திரமே போயிருந்தார்கள். அங்கிருந்து நேரிடையாக வர்ணனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடனே புத்தகக் கண்காட்சியில் இருந்ததைப் போன்று இருந்தது.அடுத்த வாரம் போய்விட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
அதனால் கடைசி நாளன்று கிளம்பிவிட்டேன். லால்பாக் தொடர்வண்டியில் ஏறி சென்னை அடைந்து தலித் முரசு அலுவலகத்திற்கு அங்கு ஆசிரியரை சந்தித்து மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தபோது மூன்று மணி. தொடர்வண்டியில் வரும்போது தம்பி சோழனுக்கு சொல்லியிருந்தேன். தம்பி சோழன் இயக்குனராவதற்கு முயர்சி செய்துகொண்டிருக்கும் தோழர். எங்கள் ஊர்க்காரர். கூத்துப்பட்டறையின் முக்கியமான நடிகராக இருந்து இப்போது வெளியேறி பயிற்சியாளராக இருக்கின்றாஅர். அதிகம் வாசிக்கக் கூடிய தம்பி. இந்தப் புத்தக கண்காட்சியில் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கின்றார் என்றால் புரியும் அவருடைய வாசிப்பு தாகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவரின் ஆர்வம் அவரை ஆசானாக மாற்றிக்கொண்டுள்ளது. சோழனின் வளர்ச்சி எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
பேராசிரியர் அய்.இளங்கோவன் எழுதிய நூலின் ஆங்கிலப் பதிப்பை எடுத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்க அந்த பிரமாண்டத்துள் நுழைகிறேன். கருப்புப் பிரதிகள் நண்பர் நீலகண்டன் கொள்கை வழி பதிப்பாசிரியர். கண்டதையும் போட்டு பணம் பார்க்க அவர் எண்ணியதே கிடையாது. மாறாக அம்பேத்கர் பெரியார் மற்றும் விடுதலைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் நூல்களையே அவர் பதிப்பிப்பார். அவருடைய கடைக்குத்தான் நான் போகவேண்டும். உள்ளே நுழைந்ததும் அவர்தான் கண்ணில்பட்டார். அவரோடே கருப்புப் பிரதிகளுக்குச் சென்று புத்தகத்தை ஒப்படைத்தேன். அங்கே தோழர்கள் கவின்மலரும் சுகிர்தராணியும் வந்தனர். ஆளுக்கொரு வணக்கத்தைப் போட்டு, அப்போதுதான் வந்த விவரத்தையும் சொன்னேன். போய் அனைத்தையும் பார்த்துவருவதாகச் சொல்லிவிட்டும் போனார் சுகி. நானும் கவினும் புத்தகக் கண்காட்சியில் கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பெரிய பெரிய புத்தகங்கள், அழகழகான அட்டை வடிவமைப்புகள் எல்லா புத்தகங்களயும் வாங்கிவிடவேண்டும் என்று மனம் ஆவலாதித்தது. ஆனால் வழக்கமாக நமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி நம்மை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டது. நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கவிதைகளயே வாங்கவேண்டும் என்னும் முடிவோடுதான் சென்றிருந்தேன்.
கவினைக் கேட்டதற்கு பெரிய பெரிய புத்தகங்களை வானகச் சொன்னார்கள். அது நம்மால் ஆகாது என்று ஏற்கெனவே எடுத்த முடிவினை செயற்படுத்த ஆரம்பித்து கவிதைகளை வாங்கினேன். உயிர்மை விளம்பரப்படுத்தியிருந்த சில்வியா பிளாத் போன்றோரின் தொகுப்புகள் வராதது வருத்தமாக இருந்தது.வம்சி புத்தகங்கள் வடிவமைப்பில் புதிய பொலிவினைப் பெற்றிருந்தது. அங்கே கைக்கு அடக்கமாக ஒரு அழகிய புத்தகத்தை வாங்கினேன். வித்தியாசமான அமைப்புடன் இருந்த கிரியா வுக்குப் போனேன். அங்கே திரு.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். முன்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றிய போது அவரை சந்த்தித்து இருந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான் பார்த்தேன். அவர்களும் கைக்கு அடக்கமாகத்தான் புத்தகங்களை வடிவமைத்து இருந்தனர். ழாக் பிரேவரின் சொற்கள் தொகுப்பை வாங்கினேன். உயிர்மைக்கு வந்து சில கவிதை தொகுப்புகளை வாங்கினேன். அங்கே எஸ்.ராமகிருஷ்ணனும்,சாருவும் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் சட்டைப் பையில் விஐபி அட்டை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அது சொல்லவில்லையென்றாலும் அவர் விஐபி தானே!
நேரம் போதவில்லை மறுநாள் பள்ளிக்குப் போகவேண்டிய இருந்தது. சோழனை அனுப்பிவிட்டு தோழர் ஆர்.ஆர்.சீனிவாசனின் மின்னஞ்சல் அழைப்பிற்காக பூவுலகின் நண்பர்கள் அரங்குக்குச் சென்றேன். மிக நல்ல முயற்சி. சுற்றுச்சூழலுக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் அவர் எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, முயற்சிகளும் தோள் கொடுக்கப் பட வேண்டியவை. வாங்கி வந்திருக்கும் புத்தங்களை இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே இவ்வாண்டு எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்து இருக்கின்றது என்றால் பொய்யில்லை.
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கண்காட்சிக்கு வரவில்லையே என்ற வருத்தம் உங்கள் பதிவைப்படித்தவுடன் ஏற்படுகிறது..
Post a Comment