Tuesday, September 8, 2009

டேவிட். டி.பக் : படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின் அவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழை மறக்க முடியாத தீராத அன்புகொண்ட டேவிட் எழுபதுகளில் மீண்டும் தமிழகம் வந்திருக்கின்றார். மதுரையில் ஈராண்டுகள் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லித்தந்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் தமிழையும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.

தமிழின் மேல் மிக்க பற்றுடையவராகத் தன்னை மாற்றிக்கொண்ட டேவிட் தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.தமிழின் முக்கிய இலக்கியங்கள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்துள்ளார் டேவிட். அதில் மிகவும் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி.

ஒருமுறை டொராண்டாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனத்தின் கண்ணன் அவர்களைச் சந்தித்த டேவிட் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் ஒன்றைத் தர அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இருக்கலாம். தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் தமிழில் மிகமுக்கியமான நூல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளி தன் அனுபவங்களைப் பற்றி கூறி அவரின் படைப்புகளில் சிலவற்றை சேர்த்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதில் இருந்த எல்லா படைப்பாளிகளையும் சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். தலித்முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியன், முற்றுகை ஆசிரியர் திரு.யாக்கன் ஆகியோரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு பிறகு என்னைப் பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.

06.09.09 ஞாயிறு அன்று காலை பிருந்தாவன் விரைவு தொடர்வண்டியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். நம்முடைய சூழ்நிலையை அப்படியே தனதாக்கிக் கொள்ளக்கூடியவராக இருந்தார். அறுபதைக் கடந்தவர்.ஆனால் மிகவும் சுறுசுறுப்பானவர். என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சுற்றிக்காட்டினேன். பிறகு கஸ்பாவிற்கு வந்தோம். கொஞ்ச நேரம் தூங்கினார். பிறகு என்னுடைய பெற்றோர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன். எங்கள் தெருவில் அப்போது சிறுவர்களும் பெரியவர்களும் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் அவரும் கலந்துகொண்டார்.தெருவில் அமைர்ந்து அவர் பிள்ளைகளோடு தாயம் விளையாடியது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே வியப்பு. கூடுதலாக என்னவென்றால் அவர் பேசிய தமிழ்.அது அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

பிறகு மீண்டும் ஆம்பூரை சுற்றினோம். எங்கள் தலித் பகுதியின் நாட்டாண்மை திரு.வெங்கடேசனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.
‘இவர் எங்கள் சேரியின் தலைவர்’
’ஓ.. அப்படியா! வணக்கம்’ என்று கைகொடுத்தார் டேவிட்.
’ஐ யாம் ப்ரெசிடெண்ட்’ என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினார் எங்களூர் தலைவர்.
உடனே டேவிட் ’நாட்டாமை’ என்று சொன்னார். ஒரு நிமிடம் உறைந்த்ப் போனார் எங்களாவர்.

அடுத்து ஒரு பிரியாணி கடைக்குப் போய் மாட்டிறைச்சி பிரியாணி ருசி பார்க்கலாம் என்றேன். ஒரு பிளேட் வாங்கி கொஞ்சம் சாப்பிட்டார். அதன் ருசி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். முழுமையாக சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் அழகியபெரியவனின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என்று திட்டம். அதனால் நல்ல பிரியாணியையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பிறகு நேராக அழகிய பெரியவனின் வீட்டிற்குச் சென்று அங்கு அவருடன் உரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் சாப்பிட்டோம். அழகிய பெரியவனின் துணைவியார் மிகச்சிறப்போடு அன்புகலந்து சமைத்திருந்தார். மிக அருமையான சாப்பாடு. அங்கிருந்து பாலூர் என்னும் தலித் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தை மையமாக வைத்து அழகிய பெரியவன் கதை ஒன்று எழுதியிருந்தார். அந்த கிராமத்தைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் உரையாடிவிட்டு திரும்பினோம். வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம். ஆம்பூரில் அய்ந்து மணிக்கு பிருந்தாவன் பிடித்தால் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வந்து டிக்கெட் வாங்கினோம். ஒரு மணிநேரம் மிகவும் தாமதமாக வந்தது அந்தத் தொடர்வண்டி. ஆம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு பேசினோம். அவர் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போவதையும் அதற்காக அவர் பெங்குவின் நிறுவனத்தை அணுக இருப்பதையும் கூறினார். ஆம்பூர் மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும் கூறினார். வானத்தில் மேகம் சூழ்ந்தது. மழை தூறியது. டேவிட் தன் பையில் குடை வைத்திருந்தார். மழைக்குப் பிடித்துகொண்டார். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றேன். தனக்குப் பிடிக்காது என்றார். தொடர்வண்டி வந்தது. அன்போடு விடை கொடுத்தேன்.

Saturday, August 29, 2009

அதுவும்

எதையும் உதிர்க்கும் மரம் உன் லாவகத்தை சொல்கிறது
அதனினும் இன்னும் சிறப்பு உனக்கான சிரிப்பு
நீயற்ற வெளியெனினும் அதில் உன்னை நிரப்புகிறாய்
தயக்கமில்லாத உன் இயல்பு காற்றாலானது
கடந்துசெல்லும் உனது வாசம் துரோகமற்றது
எதிரிக்குரிய பார்வையும் நட்புக்குரிய உன் பிரிதலும்
எதற்குள் நம்மை தீர்க்கும் என்னும்
நெடுநாளைய வழக்கிற்குள் ஏகாமல்
மரத்தைப் போல் பூவொன்றை உதிர்த்துவிட்டு போ கிளாடி
பூக்களில் உள்ள எறும்புகள் கடிக்கலாம் என்னை

Tuesday, August 11, 2009

ரூமிக்கு விருது


நாகூர் ரூமி என்னும் இலக்கிய ஆளுமையைப் பற்றி சன் தொலைக்காட்சி வீரபாண்டியன் கூறியதை இங்கே நான் இப்போதே சொல்லிவிடுகிறேன். நாகூர் ரூமி 'எழுத்து அசுரன்' என்பது தான் அது. அவருடைய உழைப்பு என்பது அசுரத்தனமானது ஆனால் அவரது எழுத்து என்பது 'அஜ்ரத்' தனமானது. அஜ்ரத் என்னும் அரபி சொல்லுக்கு குரு என்று பொருள்.


பல தலைப்புகளில் தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தும் ரூமிக்கு நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு கிடைத்திருக்கின்றது. இலியட் என்னும் ஆகப்பழைமையான கிரேக்க காப்பியத்தினை ஆங்கிலம் வழி அவர் தமிழுக்குத் தந்துள்ளார். அவர் மொழி பெயர்ப்பின் பிரதி , மூலத்தினை நகலெடுக்கும் வேலையினாலானது அல்ல. ஆனால் அதை உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய படைப்புச் சாயலாகவே தருவது எனபது அவரின் தனித்தன்மை.

விருதுகள் என்பவை ஒரு கலைஞனுக்கு ஊக்கத்தை தரக்கூடியது. கைத்தட்டலும் பாராட்டலும் ஒரு கலைஞன் வாழும்போதே அவனுக்குத் தரப்படவேண்டும்.அதுவும் அவன் இளமையாக இருக்கும்போதே தரப்படவேண்டும். அப்போதுதான் அவன் கொண்டாடப் படுவான். ஆனால் தமிழ்ச்சூழல் அப்படியானதாக இல்லாமல் போனது வருத்தத்திற்கு உரியது. எழுத்தாளன் வயதான பின்போ அல்லது இறந்த பின்போ அவனைப் போற்றி புகழ்ந்து என்ன லாபம் இருக்கப் போகிறது.

ஆனால் நல்லி விருது திறமையானவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கின்றது என்பது மிகவும் முக்கியமானது. அதுவும் விருது வழங்குவதில் எந்தவிதமான அரசியலும் குழுமனப்பான்மையும் இல்லாமல் கொடுக்கப் பட்ட்டிருக்கின்றது திறமையாளர்களுக்கும் குழு மனப்பான்மை ஏதும் அற்று தனிமையில் இயங்கும் ஆற்றலுள்ள ரூமி போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது திசை எட்டும் இதழுக்குரிய தகுதியை அதிகப் படுத்துகிறது. மொழிபெய்ர்ப்பு இதழாக தமிழில் வந்துகொண்டிருக்கும் திசை எட்டும் சிறந்த பணியினை ஆற்றியிருக்கின்றது.

நாகூர் ரூமி இருபத்தி ஏழு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். படைப்பு வெளியைத் தாண்டி சுயமுன்னேற்ற புத்தகங்கள் போன்றவையும் அதில் அடங்கும். ரூமி எழுதும் முறையினைப் பற்றி சொல்ல வேண்டும் இரவு ஆரம்பித்து விடியல் நான்கு மணிவரை அவர் தொடர்ந்து கணிப்பொறியில் தட்டச்சுவார். மீண்டும் ஏழு மணிக்கு மேல் தொடங்கிவிடுவார். இந்த அர்ப்பணிப்பும் அயராத உழைப்புமே அவரை விருது பெற வைத்திருக்கின்றது எனில் அது புகழ்ச்சி இல்லை மெய்.

Wednesday, July 29, 2009

உன் கவிதை


ஆகையினால் நீங்கள் உங்களின்
கவிதைகளைப் படிக்காதிருங்கள்
எவ்வாறேனும் தளும்பி வழியும்
நீரைப் போல கவிதைகள் வந்துவிடலாம்
அஜாக்கிரதையாக இருந்தீர்கள் எனில்
உங்களைக் கொன்று வெளிவரும் கவிதை
அப்போது அது உங்களுடையது என உங்களாலும்
சொல்லமுடியாது போகலாம்
வேரைப் போல இருக்கும் அந்தக் கவிதை
உங்கள் கற்பாறைகளையும் ஊடுருவலாம்.

Tuesday, July 21, 2009

நீக்கப்படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்

மதுரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் முரசு போன்ற இதழ்களையெல்லாம் கூட அவர் விடவில்லை என்பது மிக முக்கியம். தன் கட்சிக்கு இவ்வளவு விசேஷமாய் அவர் உண்மையாக இருந்தார். ஆனால் அவரின் கட்சி உத்தபுர சுவரை சுட்டுத்தள்ளுவேன் என்று சூளுரைத்த?! ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருகைகளையும் கட்டிக்கொண்டு மேடையில் சிலையாட்டம் நிற்க வைக்கப்பட்ட மோகன் குறித்தெல்லாம் அவரால் பகடி செய்யமுடியவில்லை. அந்த அம்மா வேறு எப்படியாவது ஈழத்தை வாங்கித்தந்து விடுவேன் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும்போதும் பேசாமல் பேன் பார்க்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

அவரைப்போல அதிரடியாக நையாண்டி பேச நமக்கு வராது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக விடுதலைக்காகப் போராடும் மக்களை இவ்வளவு இழிவுப் படுத்தவேண்டும் என்னும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று தெரியவில்லை. வால்பாறைக் கூட்டத்தில் யவனிகாவின் தொகுப்பைப் பற்றி பேசிய மதிவண்ணன் சர்வதேச ஒடுக்குமுறை குறித்தெல்லாம் எழுதுபவர்கள் தங்களை சுற்றியிருக்கும் சாதி பிரச்சனைப் பற்றி எழுத வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கும் படுகொலைச் செய்யப்படும் தமிழரைக் காக்க பெரும் எழுத்தாளர்களாகிய நீங்கள் எல்லாம் எழுதக் கூடாதா என்று தமிழ்நதி கேட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். மதிவண்ணனின் கேள்விக்கு எதிர்கேள்வியாக நீங்கள் கங்காணிகளைப் பற்றி எழுதியிருக்கின்றீர்களா என்று மற்றவர்கள் கேட்டதையொத்துதான் பதில் அளித்து இருக்கின்றார் ஆதவன். தேசியத்திற்குள் ஒன்றுபட்டு இருக்கும் அவரின் மார்க்கிசியமே அவரை இப்படி பேசவைத்திருக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையினை நாம் பரப்பலாம்.

தமிழ்நாட்டிலிருந்துப் போன தமிழர்களை அங்கிருந்த பூர்வீகத்தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்? திண்ணியத்திலே பீ தின்ன வைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்? அதற்கு இப்போது பதிலைச் சொல்லுங்கள் இல்லையென்றால் ஒன்றுபட்ட இலங்கையில் வாழுங்கள் முடிந்தால் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து உங்களுக்கு இலங்கையில் மார்க்சிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் கடலை மிட்டாய் வாங்கித்தருகிறோம் என்பார். தன்னுடைய தலித் அரசியலையே தன் எழுத்தில் போல கட்சியில் பேச முடியாமல் தவிக்கும் ஆதவனுக்கு அடுத்த தேர்தலில் ஓசூரில் நிற்க அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?

சில விளக்கங்களைப் பெற விழைவதில் தவறேதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்திய விடுதலைப் போர் நடைபெற்றபோது சாதி அற்றுப் போயா இது இருந்தது. அப்போது பொதுவுடைவாதிகள் இங்கு இல்லையா? அவர்கள் அப்போது தலித்துகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு எவ்விதத்தில் உறுதுணையாக இருந்தார்கள். தலித்துகளைக் கொடுமைப்படுத்திய பார்ப்பன பனியாக்கள் கைகளிலும் இந்துத்துவ வாதிகளிடத்திலும் இந்திய சுதந்திரம் தரப்பட்டபோது இவர்களுடன் இருக்க முடியாது தலித்துகளுக்கு தனிநாடு கொடுங்கள் என்று கேட்ட அம்பேத்கருக்கு ஆதரவாக அன்றைய பொதுவுடைமைவாதிகள் இருந்தார்களா? இன்னும் தீர்க்கப்படாத கொடுங்கனவாக இருக்கின்ற சாதிப் பிரச்சனைகளை ஒழிக்க இப்போது மிகவும் வளர்ந்துள்ள ஆதவனின் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அவர் கூறாமல் ஈழப்போரில் தங்கள் வாழ்வைக் கொடுத்துப் போராடும் போராளிகளை குறை கூறாமல் இருக்கவேண்டும்.

இன்றைக்குப் புலிகள் அழிக்கப்பட்டார்கள். வதைமுகாம்களாக மாறிப் போயிருக்கும் இலங்கை அரச முகாம்களில் தத்தளிக்கும் தமிழினத்தின் மக்களை எப்படி மீட்பது என்று சிந்திப்பது யார்? அவர்களுக்கான அரசியல் சார்ந்த உரிமைகளைப் பேசுவது யார்? ராஜபக்சேவும் அவருடைய அரசும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலித் பார்வையில் ஈழப்பிரச்சினையை அணுகவேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதே பார்வையில் ஆதவன் குடியிருக்கும் கோயிலான அவருடைய கட்சியைப் பார்க்கவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம். அதுதான் அவருடைய வார்த்தைகளுக்கான நியாய்த்தைப் பெற்றுத்தரும்.

ஈழப்பிரச்சினையையும் இங்குள்ள சாதித்தமிழரின் போக்கையும் நாம் முடிச்சிப் போடமுடியுமா என்ன? இங்குள்ளவர்கள் ஈழப்பிரச்சினைய அரசியலின் பகடைக்காயாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது ஆதவன் போன்ற அறிவுசாலிகளுக்கு தெரியாதா என்ன?

ஈழத்தில் சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தலித் படைப்புகளைத் தந்த டேனியேலின் படைப்புகள் நமக்கு சொல்கின்றன எல்லாவற்றையும். ஆனால் அறுபது ஆண்டுகால பிரச்சனையினை அல்லது விடுதலைப் போரை எப்படி நம்மால் புறந்தள்ள முடியும். இந்திய விடுதலைக்கு தலித்துகள் பங்காற்றவில்லை என்று இப்போது இங்கே சிலபேர் கூப்பாடு போடுகிறார்களே அதுபோல் ஆகிவிடாதா? சரி புலிகள் அற்ற தமிழர்கள் இப்போது சிங்கள உழைக்கும் மக்களோடு இயைந்து வாழ்ந்திட இயலுமோ? அதற்கு ஆவணவற்றை ஆதவன் செய்வாரா? எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ ஞானசேகரனை தோற்கடித்து விடுவார் போலிருக்கின்றது ஆதவன்.

ஆதவன் மேலும் அவருடைய எழுத்துக்கள் மீதும் மாறாத பற்றும் நம்பிக்கையும் நாம் வைத்திருக்கின்றோம். அது தகர்ந்து போகும் அளவுக்கு சில நேரங்களில் அவருடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன. ஈழத்தமிழர் இப்படி கொல்லப்படுகின்றனரே என்று கேட்டால் அவர்களிடம் இருக்கும் சாதியைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை என்கிறார். இது அவரின் பார்வை. அப்படி அவர் பேசியிருந்தால் நாம் எந்த விதமான கருத்தினையும் சொல்லல் ஆகாது. ஆனால் அவர் தலித் பார்வை என்று அதை கட்டமைக்கின்றபோது ஒட்டுமொத்த தலித்துகளின் நிலையா அது என்பது கேள்வியாக இருக்கின்றது. இத்தகைய கொடும் படுகொலையினைச் செய்த ராஜபக்சேவை அவர் ஒரு வார்த்தைகூட அவர் விமரிசிக்கவில்லை. அதற்குத் துணைபோன இந்தியாவின் சதியினை அவர் பேசவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து தன் ஆக்கங்களை வேண்டாம் ஒரு பேச்சாகக்கூட அவர் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைத் திட்டுவதும் அவர்களின் அரசியலை விமரிசிப்பதும் தன்னுடைய முழுமுதல் கடமையாகக் கொண்டிருக்கின்றார். ஈழத்தில் இருக்கும் சாதிய படிநிலையை வைத்துக் கொண்டுப் பார்த்தாலுமே யார் இப்போது ஈழத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்? இலங்கை அரசு நடத்தும் முகாம்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாரெல்லாம் தன்னுடைய மண்ணைவிட்டு வரமுடியாத சூழலில் இருக்கின்றார்களோ அல்லது அகதிகளாக உலகநாடுகளில் அலையாமல் தன் மண்ணிலேயே இருந்து கடைசிவரை பார்த்துவிடுவது என்று நினைக்கும் விளிம்பு நிலை மக்கள்தானே? அவர்களை கொத்தணி குண்டுகளையும் வேதி குண்டுகளையும் போட்டு கொன்ற கொடுமையைப் பேசமுடியவில்லை என்றால் தலித் விடுதலையினை மட்டும் எதை வைத்துப் பேசுவது என்பது நமக்கு சரியாக விளங்கவில்லை.

சாதியையும் அதன் வேரான இந்து மத்த்தையும் எதிர்க்காமல் புரட்சிபேசும் அவருடைய கட்சி சாதி மலிந்துப் போய் கிடக்கும் இந்தியாவில்தான் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கபுரட்சியையும் உழைக்கும் மக்களின் ஆட்சியையும் கொண்டுவருவது ஆகாது. கட்சியின் முக்கிய வேலை திட்டமாகவே சாதி ஒழிப்பை நிகழ்த்திவிட்டு அப்புறம் வர்க்க புரட்சியை வைத்துக் கொள்ளலாம் என ஆதவன் அங்கு பேசமுடியுமோ என்றால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்னும் ஒன்றும் வேலைதிட்டங்களில் ஒன்று.

ஈழத்திலும் அதைவைத்து தானே பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில்கூட எத்தனையோ தலித்துகள் உயர் பதவிகளில் இருந்திருக்கின்றனர். அதை வழிநடத்தி இருக்கின்றனர். புலிகளின் அரசியல் தவறு என்றால் உலகத்திலிருக்கும் இத்தனை கோடி தமிழர்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தங்களில் அதை நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் அல்லது தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு விடுதலை இயக்கத்தையோ அல்லது அது போராடும் தேசிய விடுதலையினையோ சாதியின் பேரால் கொச்சைப் படுத்துதல் ஆகாது. அது தலித் பார்வை இல்லை. ஒடுக்கப்படுகின்ற மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலைக்காக பேசுவதே தலித்தியம். அது விடுதலைக்கான கருத்தியல்.

புரட்சியாளர் அம்பேதகர் கருதுவதைப் போல தலித் விடுதலை என்பது பிற்படுத்தப்பட்டவரின் ஒத்துழைப்பையும் சார்ந்த ஒன்றுதான். தலித் பிற்படுத்தப் பட்டவரின் ஒற்றுமையை அவர் விரும்பியதைப் போல ஈழத்தமிழர்களின் விடுதலையும் சாதி கடந்துதான் வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சாதியம் அது சார்ந்த பிரச்சினைகளயும்விட வாழ்தல் என்பதுவும் அதைவிட விடுதலை என்பதும் மிக முக்கியம்.

இன்றைய சூழலில் தமிழர்களின் நிலை என்ன? அங்கே நிலவும் சாதி இப்போது அதாவது புலிகள் அல்லாத தமிழீழத்தில் எப்படி சாத்தியமாகும். கோட்பாட்டளவிலே இங்கேயே இருந்துக்கொண்டு நாம் வாய்பேசுவதைவிட அல்லது நாட்டை விட்டு வெளியேறி சுகமாக அயல்நாடுகளில் வாழ்வோரைவிட ஈழத்திலே கிடந்து அழிந்துக் கொண்டிருக்கும் அவர்கள் தான் பேசவேண்டும். பின் இவர்கள் பேசி என்ன ஆகப்போகிறது?

Monday, July 20, 2009


ஒரு வகையில் யாரையும் குற்றம் சொல்ல
இயலா வாழ்வின் போக்கு
அனுமதியின் துணையின்றி வரும்
காற்றின் தன்மை புயலுற்று இருப்பதின் ரகசியம் புரியாமல்
எதிர்படும் நனவோட்டத்தின்மீது
எழுதப்படும் செலவுகள் குறித்த கணக்கை
சரிபார்க்க முடியா தருணத்தின் பூர்வீகத்தில் பூக்கும்
மலர்மீது அமர்வதும்
அல்லது
அம்மலரைப் பறிப்பதும்
பறிக்கப்பட்ட மலரின் வாசத்தை நுகர்தலும்
அனிச்சை செயலானபிறகு
மீன்களைக் கொத்தும் பறவை ஒன்றுக்கு
இறக்கைகளே துடுப்பாகிவிடுவது என்பது
தவிர்க்கவே இயலாததுதான்
எனவே இந்தக் கவிதையை இத்துடன்
முடிப்பதோ அன்றி தொடர்வதோ
கவிதையின் பாடு
எழுதியவனைத் தேடும் எண்ணமற்று இருப்போர்
இதைப் படிக்க கடவர்.

Monday, June 29, 2009

போதலின் தனிமை


எல்லைகளைக் கடக்கின்ற பாதங்களில்
குவிந்திருக்கின்றது வழி

தன்னை மீட்க கடந்த தொலைவின்
நிழல் கசிந்த ஒரு நொடியில் ஆனது அனைத்தும்

வரவின் கூடலில் வந்தமரும் குருவிகளிடம்
இருப்பிடம் கேட்க
இறக்கையினை அடிக்கின்றன அவை

பேச்சரவம் அரவத்தினைப் போல
சுருண்டுக் கிடக்க
வார்த்தைகள் வாலாட்ட முனையாமல்
பம்முகின்றன
போகவேண்டிய இடம் குறித்த பிரக்ஞையில்