Monday, August 25, 2008

யாருக்கு


தேவதேவனின் முழு கவிதைத் தொகுப்பையும் படிக்கும் பிரத்தியேக வாய்ப்பு எனக்கு கிடைத்தது।எங்கள் ஊர் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சொல்லி வாங்கிவந்தேன்। மிகவும் கவனிப்புக்குரிய ஒரு முழுத்தொகுப்பாக அது கிடைத்தது। அது மட்டுமல்ல அவரின் கவிதைகள் பார்க்கும் பொருள்களில் எல்லாம் நுண்மையைத் தேடும் தன்மையுடையவனாக இருக்கின்றன. அன்றாட வாழ்வின் மீது கட்டப்பட்ட முடிச்சிகளை லாவகமாக அவிழ்க்கும் ஒரு மந்திரக்காரனின் லாவகம் வாய்ந்த அவரின் எழுத்துக்கள் உண்மையிலே சிறப்பு.


சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள்

அன்பின் காதலின் சொற்களை ஒரு கோப்பையில் ஊற்றித் தருகிறார் சக்தி ஜோதி। மொழிக்கும் அவருக்கும் உள்ள பரிச்சயம் அவரின் காதலை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது। தீராத காதலின் கண்கள் ஒரு பால் நிலவைப் போல ஜொலிக்கின்ற வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட காதல் கவிதைகள்। உறுப்புகளை முதன்மைப் படுத்தி எழுதப்பட்ட பெண் எழுத்துக்கு மாறாக காதலையும் அதனை சேர்க்க வேண்டிய ஆணையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டிருக்கிறது। காதல் கவிதைகள் அகமற்றுப் போன இந்த தருணத்தில் சங்கப் பெண் கவிஞர்களின் முகமெடுத்து வந்திருக்கிறார் சக்தி ஜோதி। காதலின் தருணமும் அதன் கம்பீரமும் ஆண் என்ற புள்ளியிலும் பெண் என்ற புள்ளியிலும் அல்லாது தனித்து அது இருவருக்கும் பொது என்னும் புள்ளியில் ஓர்மைப் படும்போது இப்படி இருக்கும் என்று தோன்ற வைக்கும் கவிதைகள்। தன் காதற்தலைவனைத் தேடி அலைந்த சங்கப்பெண் புலவர் வெள்ளிவீதியைப் போல தன் காதலை காதலன் என்னும் அடர்ந்த வனத்துக்குள் தான் வைத்த இடத்தினின்று நம் எல்லாரையும் தேடவைக்கிறார் ஜோதி। காதலனும் காதலியும் தலைவன் தலைவராகப் போற்றப் பட்ட சங்க மரபிலிருந்து பூ ஒன்று நிலம் புகும் சொற்களாக வந்திருக்கிறது.


No comments: