Thursday, March 19, 2009

சினிமாவின் அரசியல்


தமிழகத்தின் வரலாற்றை பிற்காலங்களில் எழுதக்கூடியவர்கள் அதற்கும் திரைபடத்திற்கும் உள்ள தொடர்பை எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. ஒரு மொழியின் இலக்கிய படைப்புகளிலிருந்து அதனோடு ஒட்டிய சமூக வரலாற்றையும் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கே வரலாறு என்பது வேறாகவும் மொழி மற்றும் அதன் படைப்புகள் என்பவை வேறாகவும் இருக்கிறது. படித்தலினால் கிடைக்கும் அனுபவம் என்பது பார்த்தலின்போது வேறு வடிவமாக உறுதியானதாக வாசகன்/பார்வையாளன் மனத்தில் தங்குகிறது. இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சமுகவரலாற்றோடு திரைப்படங்களுக்கு இருக்கும் இயைபும் அல்லது முரணும் அவை நமக்குள் நிகழ்த்தும் சலனங்களின் தன்மையிலும் நாம் சினிமாவை அனுகவேண்டியிருக்கிறது.இலக்கியம் சார்ந்து அல்லது திரைசார்ந்து வரும் ஊடகங்கள் உலகத்தின் பல்வேறு மொழிகளில் வரக்கூடிய சிறந்த திரைப்படங்களை ஆராதிப்பது அல்லது அவற்றின் தரம் பற்றிய உரையாடல்களை உருவாக்குவது என்பவை போன்றுதான் வினையாற்றுகின்றன. அதுமட்டுமில்லாமல் அகிராகுரோசா அல்லது இந்திய அளவில் சத்தியஜித்ரே மிருணாள் சென் என்றுதான் படைப்புகளை உருவாக்குகின்றன. திரைப்படப் பயிற்சிப் பட்டறைகள் இந்தவகையிலேயே நடத்தப்படுபவனாக இருக்கின்றன. உலக திரைப்படங்களையும் சில குறும்படங்களையும் வைத்துக்கொண்டே அவை ஒப்பேற்றப்படுகின்றன என்று சொல்லலாம்.வெகுமக்கள் சினிமாகவாக அறியப்படும் சினிமா சம்பந்தமான உரையாடல்கள் வெறுமனே திரை விமர்சனம் என்னும் பெயரில்தான் தமிழ் ஊடகங்களில் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திரைப்படங்களில் செலுத்தப்படும் கவனம் மக்களை நேரிடையாக சென்றடையும் வியாபாரச் சினிமாக்களை குறிவைப்பதில்லை. இதனால்தான் தமிழ்சினிமா என்பது இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு ஒட்டுமொத்த வடிவத்தைப் பெற்று இருக்கிறது.உலகமயமாக்கல் சூழலில் செல்லுலாயிடில் சொல்லப்படும் கலைகள் கூட உலகமயமாக்கப் பட்டபின் அந்ததந்த இன மக்களின் திரைப்படங்கள் என்ற வட்டத்திலிருந்து விலகி உலக சந்தையை மனதில்கொண்டு காட்சி அமைப்புகள்,பாத்திரங்களின் செதுக்கல், உணவு வகைகள், உரையாடல்கள் (சில தமிழ்ப்படங்களில் ஆங்கிலப் படங்களைவிட அதிகமான ஆங்கில வசனங்கள் இருக்கும்) ஆகியவை அமைக்கப்படுகின்றன. படத்திற்கே கொஞ்சமும் தொடர்பேயில்லாத ஒரு சூழலில் எங்கோ ஒரு வெளிநாட்டில் நம்முடைய கதாபாத்திரங்கள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் பின் காலனிய அரசியல் பின்புலத்தோடு 1930களுக்குப் பின் பேசும்படங்கள் உருவாக்கப்பட்ட பின் நம்முடைய திரைப்படங்கள் சமுகத்தின் முக்கிய பங்காளியாக மாறி இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் புராணங்களை சுட்டு தள்ளிய இந்திய கேமிராக்களின் தாக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாடுகளில் அக்காலங்களில் இந்தி மற்றும் இந்துத்துவ தன்மையுள்ள படங்களே இந்திய திரைப்படங்களாக அறியப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே தமிழ் திரைப்படங்களின் அணுகுமுறை தொடங்கியிருக்கின்றன. பேசும்படங்கள் வந்தபின் மட்டுமே தமிழ் சினிமா என்ற வகைமை உருவானது. அதுவரை அது இந்திய தேசிய சினிமாகவே இருந்தது. ஆனால் தமிழின் மிகப்பழைமையான இலக்கியத்தொன்மையின் நிழலிருந்து நம் படங்கள் தொடங்கியிருக்குமேயானால் மிகச்சீர்பட்ட வெகுமக்கள் திரைப்படங்கள் தமிழில் உருவாகியிருக்க நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற பெரும் காப்பியங்களிலிருந்தும் அக இலக்கியங்களிலிருந்தும் தமிழ் சினிமா வேர் கொண்டிருந்திருந்தால் அதன் திசை உலக சினிமா என்ற தளத்தை அடைந்திருக்கும். மாறாக இந்தியாவின் புராணங்களான ராமாயாணம், மகாபாரதத்திலிருந்தே திரைப்படங்கள் உருவானதால்தான் மூடநம்பிக்கைகள் நிறைந்த அல்லது சமுக யதார்த்தத்தின் எதிர்நிலைப் படங்களே இங்கே குவிக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்கள் இந்திய தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மேற்கொள்ளப்பட்ட போதுதான் தமிழ் வெகுமக்கள் சினிமா என்பது அரசியல் கருத்துடன் புலப்பட ஆரம்பித்தது. அதன் நீட்சி 1970 களின் இறுதிவரை தென்பட்டது, இந்தியை இந்தியாவின் ஒரே மொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகத்தில் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கமானது சுயமரியாதை மற்றும் இனவாரியான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை பேசிக்கொண்டிருந்த வேளையில் மொழி ஒரு அரசியல் ஆயுதமானது. தமிழ் தேசிய பிரகடனம் அதைத் தொடர்ந்து பெரியார் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு ஆகியவை தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியத்தன்மையை பேசி வந்த சினிமா தமிழ் இயக்கங்களின் குறிப்பாக திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பின்பற்றி இயங்கத்தொடங்கின. திரைப்படங்களின் பெயர்கள் , கதைப்பாத்திரங்களின் பெயர்கள் ஆகியவையும் அரசியலுடன் கலந்ததாகவே இருந்தன. 1970 எழுபதுகளில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவற்றின் மூலம் பெரும் மக்கள் சந்திப்பை நிகழ்த்த முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆழமாக நம்பியது. அதன் முதல் தலைவரான அண்ணா அவர்கள் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.'சென்சார் இல்லாமல் ஒரு படத்திற்கு அரசு அனுமதி தருமேயானால் ஒரே படத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்' என்றார். அதனால்தான் இயற்கையாகவே மொழி அறிவும் பிரதிகளின் பலமும் உள்ள திராவிட இயக்கங்களின் தலைவர்கள் சினிமாவை தன் அண்ணன் வழியில் கைப்பற்றினர்.கதைகளிலும் வசனங்களிலும் தற்போதைய முதல்வர் கருணாநிதி கோலோச்ச நடிப்பிலும் நாயகத்தன்மையிலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆண்டார். இன்னும் சில நடிகர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டு திமுக வில் இணைய திமுக நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் பயன்படுத்திக்கொண்டது. அண்ணாவின் இதயக்கனியானார் எம்.ஜி.ஆர். 'தம்பி உன் முகத்தைக் காட்டு; ஒரு லட்சம் ஓட்டு' என்று அண்ணாவால் வேண்டுகோள் விடப்பட்டவரானார். அண்ணாவின் மறைவுக்குப்பின் திமுக பிளவுபட்டது. எந்த சினிமா திமுகவின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டதோ அதே சினிமா தான் எம்ஜிஆரின் அதிமுக வுக்கும் பயன்பட்டது. அவர் மறையும் வரை அவரே முதல்வராக இருந்தார். கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜர் தன்னுடைய பொதுவாழ்வில் தூய்மையானவர் என்று பெயர் பெற்றவர். 'நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று கூறிய அவரை தமிழக மக்கள் தோற்கடித்தனர். ஆனால் உண்மையிலே உடல்நிலை சரியில்லாத காலத்தில் அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆரால் வெற்றிப்பெற முடிந்தது என்றால் திராவிட இயக்கங்கள் எத்தகு வலுவோடு சினிமாவை தனக்கானதாகப் பயன்படுத்திக்கொண்டன என்பதை அறிவது மிக எளிது. இத்தகைய போக்கால் உண்மையான சினிமா வடிவம் தமிழர்களுக்கு அறிமுகமாகாமல் அல்லது அத்தகைய படங்களை ரசிக்கும் மனோபாவமே இல்லாமல் தமிழ் ரசிகன் தடுக்கப்பட்டான். அப்படி ஏதாதவது கலைத்தன்மையுள்ள படம் வருமே என்றால் அது 'கலைப் படம்' என்றும் முத்திரைக்குத்தப்பட்டு புதிய சினிமா வகை ஒன்று உருவானது 'வியாபார சினிமா'. இதைப் பார்ப்பவர்கள் அதைப் பார்க்கமாட்டார்கள் அதைப் பார்ப்பவர்கள் இதைப்பார்க்க மாட்டார்கள் அதே போலத்தான் படமெடுப்பவர்களும். மொத்தமாக சினிமா என்பதன் உண்மையான பொருள் என்னவென்றே அறியப்படாமல் போனது. இன்னொரு மோசமான விளைவைக்கூட நாம் அனுபவிக்கிறோம். ‘நாயக வழிப்பாடு' இன்றைக்கும் முதல்வராகும் கனவோடு கோடம்பாக்கத்தில் எத்தனைப் பேர் அலைகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? சமுக அரசியல் தளத்தின் பிரதிமை ஏதாவது தற்கால வெகுமக்கள் சினிமாவில் தெரிகிறதா என்றால் இல்லை. வரும் ஒருசில படங்களைத்தவிர்த்து பார்த்தால் அதே ஒற்றைத்தனமாக கதை நாயகன் கோபப்படுவதும் அதற்காக எதிரிகளை துவம்சம் செய்வதும் அதற்காக கையில் ஒரு சூலாயுதம் நெற்றியில் பெருவிரலால் மேல் நோக்கி இழுக்கப்பட்ட குங்குமப்பொட்டு என புறப்படுவதும் என்று இந்துத்துவ மனநிலையை விரிக்கின்றவையாக இருக்கின்றன. தலித் அரசியல், தலித் இலக்கியம் என தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை நிறுவி இருக்கின்ற இந்தத் தருணத்தில் தலித் சினிமா என்ற பேச்சே இன்னும் எழவில்லை. தலித் மக்கள் சம கால திரைப்படங்களில் காட்டப்படுவது குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது. வீதி கூட்டுபவர்கள், மலம் அள்ளுபவர்கள் என்று ‘காமெடி'க்காக பயன்படுத்தப்படுவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். ஒரு சேரிக்குள் சென்ற விவேக் அங்கே வாழுகின்ற மக்களை நையாண்டி செய்வதும் அவர்கல் மேல் துர்நாற்றம் வீசுகிறது என்பதும், எவ்வளவு சொன்னாலும் அந்த வடிவேல் ‘சண்டாளா' என்ற சொல்லை வசவு சொல்லாகவே இன்னும் பயன்படுத்துகிறார் என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. வியாபாரத்தை முன்வைத்து தயாரிக்கின்ற படமாக இருந்தாலும் இன்றைக்கும் தொழில் நுட்பங்கள் மிகைந்துள்ள போதும் திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் தலித்துகளேயாவார்.அதுமட்டுமல்ல அனைத்துக் கதாநாயகர்களுக்கும் வண்ணக்காகிதம் முதல் பெரிய பெரிய நட்சத்திரங்களைக் கட்டுபவர்களும் இவர்கள்தான். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் எதுவும் தமிழில் சரியாக வரவில்லை.இதே போன்று இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். தமிழில் குழந்தைக்களுக்கான திரைப்படங்களின் நிலை என்ன? குழந்தைகள் இன்றைய திரைப்படங்களைப் பார்த்தே சாதி,மதம், வன்முறை போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளின் உலகத்தை தேடுகின்ற படங்கள் எதுவுமே இங்கு வரலில்லை. பெரியவர்களுக்கான படமாக எடுக்கப்படுவதையே அவார்களுக்கானதாகவும் கருதிக்கொள்வதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.எங்கள் கிராமத்தில் ஒன்பதாவது படிக்கின்ற மாணவன் தன்னுடைய பாட்டி செத்துப்போன துக்கத்தை கொண்டாடும் பொருட்டு அருகிலுள்ள மதுக்கடையில் பீர் ஒன்றை வாங்கி தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு துக்கத்தைப் போக்கியிருக்கிறான் என்றால் அந்தக் காட்சி படிமம் எப்படி அவன் மனதுக்குள் பதிந்தது? தற்போது இருக்கிற திரைப்படங்களே அதற்கு முதல் காரணியாக இருக்கமுடியும் என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். சில திரைப்படங்களிலே பாடல் காட்சிகளில் காட்டப்படும் குழந்தைக்காதல் பள்ளிகளில் காதல் புரிவதற்கு மாணவர்களுக்கு உந்துதலை தந்து இருக்கின்றன.இருப்பினும் சில நல்ல படங்களும் அவ்வப்போது தலைக்காட்டாமல் இல்லை. மொழி, பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம்,தனம்,ராமன் தேடிய சீதை ஆகியவை வாழ்வையும் களத்தையும் வெளிப்படுத்தக்கூடிய படங்களாக அமைந்திருக்கின்றன. தற்போதைய இயக்குனர்களும் முன்பு போலில்லாமல் மிக்க வாசிப்பு அனுபவமும் வரலாற்று அறிவோடும், மண்ணோடு தொடர்புடையவர்களாகவும் வந்திருக்கின்றனர். எனவே மாற்று சினிமா என்ற சொல்லாடலின் இறுக்கத்தில் நம்மால் வெகுமக்கள் சினிமாவைப் புறந்தள்ள முடியாது. வெகுமக்களுக்கானதை உண்மையாகவே மக்களுக்கானதாக மாற்றுவோம்.விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி என்ற இலக்கியக் கோட்பாடு சினிமாவிலும் செல்லுபடியாகும்.

No comments: