Tuesday, March 2, 2010

தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்



(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)

தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.

அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.

அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது

அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.


தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.

இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.

தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.

தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.

தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்

மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப்போல்
கம்பீரம் வீசுகிறது

என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.

ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.

சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.

பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.